'குழந்தைக்காக ஆசையா வாங்கிய சாக்லெட்...' 'சாக்லெட் கவருக்குள்ள இப்படி ஒண்ணு இருக்கும்னு...' - கனவுல கூட யாரும் யோசிச்சிருக்க மாட்டாங்க...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல் மாவட்டம் ஆரோக்கிய மாதா தெருவில் வசித்து வருபவர் கமலக்கண்ணன் (35). தனியார் கம்பெனியில் பணிபுரியும் ஊழியரான இவர் நேற்று முன்தினம் (06-11-2020) இரவில் தனது நண்பருடன் திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த உறவினரின் குழந்தையிடம் கமலக்கண்ணன் கொஞ்சலாக பேச்சு கொடுத்தார். குழந்தைக்கு மேலும் உற்சாகத்தை அதிகரிக்கும் விதமாக, அந்த குழந்தைக்கு விருப்பமான பத்து ரூபாய் சாக்லெட்டை அருகில் இருந்த கடையில் கமலக்கண்ணன் வாங்கி கொடுத்திருக்கிறார்.
சாக்லெட்டின் கவரை பிரித்து, குழந்தையிடம் கொடுக்க முயன்றபோது அதிர்ச்சியடைந்தார். அதில் பாதி புகைத்த பீடித்துண்டு காணப்பட்டது.
இதுகுறித்து உடனடியாக அந்த கடைக்காரரிடம் முறையிட்டபோது, அவர் வேறு சாக்லெட் தருவதாக கூறினார். இதுதொடர்பாக கமலக்கண்ணன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுத்தார். உடனே உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று, சாக்லேட்டில் இருந்த பீடித்துண்டை பார்வையிட்டு சோதனை செய்தனர்.
இதன்பின்னர், அந்த கடையில் இருந்த அனைத்து சாக்லேட்டுகளையும் பறிமுதல் செய்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கடைக்காரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆய்வு முடிவு வந்தபின்பு கடைக்காரர் மற்றும் சாக்லெட் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாக்லெட்டில் பீடி இருந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.