"அலெர்ட்டா இருங்க.. இது ரொம்ப முக்கியமான நேரம்"... உலகம் முழுவதும் இருக்கும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு விடுத்த எச்சரிக்கை.. மிரட்டும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதை அடுத்து உலகம் முழுவதும் இருக்கும் அமெரிக்க மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.
அல் ஜவாஹிரி
உலகையே ஸ்தம்பிக்க செய்த செப்டம்பர் 11 தாக்குதலுக்கு ஒசாமா பின் லேடனுக்கு உதவியாக இருந்தவர் அல் ஜவாஹிரி என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற இரட்டை கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவே, பின்னாளில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் அமெரிக்கா படைகளை குவிக்க முக்கிய காரணமாகவும் அமைந்தது. இந்த நாட்களில் அல்கொய்தா தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனுக்கு பக்கபலமாக அல் ஜவாஹிரி இருந்ததாக கூறப்படுகிறது.
அதிரடி தாக்குதல் மூலம் கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்க படையினரால்
பின்லேடன் கொல்லப்பட்டார். அப்போது, அல்கொய்தாவின் தலைவரானார் அய்மான் அல் ஜவாஹிரி. அதுமுதல் அவரை கண்டறிய பல ரகசிய திட்டங்களை அமெரிக்க அரசு செயல்படுத்திவந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஆப்கானிஸ்தானில் வசித்துவந்த அல் ஜவாஹிரியின் வீட்டில் ட்ரான் தாக்குதலை நடத்தியது அமெரிக்கா. இதில் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.
எச்சரிக்கை
இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு உள்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பயங்கரவாதத் தாக்குதல்கள், அரசியல் வன்முறைகள், ஆர்ப்பாட்டங்கள், குற்றச் செயல்கள் மற்றும் பிற அசாதாரண சம்பவங்கள் பெரும்பாலும் எந்த முன்னறிவிப்பும் இன்றி நடைபெறுவதால், அமெரிக்கக் குடிமக்கள் வெளிநாட்டிற்குச் செல்லும் போது அதிக விழிப்புணர்வுடன் இருக்கும்படி வலியுறுத்தப்படுகிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல, வெளிநாடுகளில் வசித்து வரும் அமெரிக்காவை சேர்ந்த மக்கள் உள்ளூர் செய்திகளை அவ்வப்போது கவனித்துவரும்படியும் எப்போதும் அருகில் இருக்கும் அமெரிக்க தூதரகம் அல்லது துணைத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்கும்படியும் வலியுறுத்தியுள்ளது அமெரிக்க அரசு.