அதிகாலை 4 மணிக்கு அடித்த போன்!.. "மரத்த வெட்டிட்டாங்க!".. வனத்துறையை அலறவிட்ட சிறுவன்!.. பதறியடித்து ஓடிய அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனக்கு பிடித்த வேப்ப மரத்தை வெட்டியதால் வனத்துறைக்கு போன் செய்து புகார் அளித்த 8ம் வகுப்பு மாணவன். மாணவனின் புகாரின்படி மரம் வெட்டியவருக்கு ரூ.62ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள சைதாபாத் பகுதியில் இருந்து தெலுங்கானா வனத்துறையினரின், டோல் ப்ரீ எண்ணுக்கு அதிகாலை 4 மணியளவில் அழைப்பு ஒன்று வந்தது. அழைப்பின் மறுபக்கம் பேசியதோ 8 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன்.
அதிகாலை உறங்கிக்கொண்டிருந்த சிறுவன், ஏதோ சத்தம் கேட்டு எழுந்துள்ளார். ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் ரெட்டி என்பவர் வீடு கட்டுவதற்காக 40 வருடப் பழைய வேப்பமரம் ஒன்றை வெட்டி வாகனத்தில் ஏற்றியுள்ளார். சுற்றுச்சூழலில் மிகுந்த ஆர்வமுடைய அந்த சிறுவனுக்கு இது மிகுந்த வேதனையாக இருந்துள்ளது. உடனடியாக, அந்த சிறுவன், அதிகாலை நேரம் என்றும் பாராமல் தெலங்கானா வனத்துறையினருக்கு போன் செய்து மரம் வெட்டுவது பற்றி தகவல் அளித்தார்.
தெலங்கானா அரசு மரங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க, 'கு ஹரிதா ஹராம்' என்ற திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளிலும் பசுமை அமைப்பை ஏற்படுத்தி, மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
தனது பள்ளியில் பசுமை அமைப்பின் உறுப்பினராக இருந்த அந்த மாணவன், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். வனத்துறை அதிகாரிகள் பல முறை கேட்டும் தன்னை பற்றிய மற்ற விவரங்கள் எதையும் சிறுவன் குறிப்பிடவில்லை.
புகாரை ஏற்ற தெலங்கானா வனத்துறை அதிகாரிகள், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றனர். விசாரணையில், சந்தோஷ் ரெட்டி முறையான அனுமதி வாங்காமல் மரத்தை வெட்டியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, சந்தோஷ் ரெட்டிக்கு ரூ. 62,075 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சிறு வயதிலேயே சூற்றுசூழல் மீது மாணவனுக்கு இருக்கும் ஈடுபாட்டினை கண்டு வியந்த தெலங்கானா வனத்துறையினர், அந்த பெயர் அறியாத மாணவனுக்கு தங்கள் பாராட்டினை தெரிவித்தனர்.