“பொங்கல் பரிசு 1000 ரூபா மிஸ் பண்ணிட்டீங்களா..? சரி நான் தரேன்”.. மூதாட்டியை நெகிழவெச்ச காவலர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி இந்த ஆண்டு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் பணம் தரப்படுகிறது. பரிசு பொருட்கள் மற்றும் பணம் அடங்கிய இந்த பொங்கல் பரிசு தொகுப்பு, பொதுமக்களுக்கு கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் வழங்கப்பட தொடங்கி இருக்கிறது. முன்னதாக இதற்கான டோக்கன்கள், ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களின் இல்லத்திற்கே சென்று விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த இலவச டோக்கன்களுடன் ரேஷன் கடைக்கு செல்லும் குடும்ப அட்டை தாரர்கள் அரசு தரும், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை ஆகிய இந்த பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த நிலையில்தான் ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே மூதாட்டி ஒருவர், தான் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகை பெற்றுக் கொண்டதாகவும் அதே சமயம் தனக்கு ஆயிரம் ரூபாய் தரவில்லை என்றும் குற்றம் சாட்டினார். அவரை விசாரித்த காவலர் குறிப்பிட்ட ரேஷன் கடையில் இது பற்றி கேட்டிருக்கிறார். ரேஷன் கடை தரப்பிலிருந்து மூதாட்டிக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்ந்து ஆயிரம் ரூபாய் பணம் தந்து விட்டதாகவும், ஆனால் மூதாட்டி மறந்து விட்டிருக்கலாம் அல்லது தொலைத்திருக்கலாம் என்றும் தாங்கள் கொடுத்தது உண்மைதான் என்றும் விளக்கம் அளித்து இருக்கின்றனர்.
ஆனாலும் மூதாட்டி, தான் பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வாங்கியதாகவும், ஆயிரம் ரூபாய் பெற்றதாக நிச்சயமாக தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதை கேட்ட காவலர், “சரி விடுங்கள் உங்களுக்காக 1000 ரூபாய் நான் தருகிறேன் பாட்டிமா” என்று தன் பாக்கெட்டில் இருந்து ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து கொடுத்து இருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காவலர் தன் பாக்கெட்டில் இருந்து ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து தந்தது நெகிச்சி செயல் என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.