'ஒத்தக்கால் ஆசனா', 'தவளை ஜம்பிங்' ... ஆத்தி 'இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே' ... போலீசாரின் 'புது புது' நூதன தண்டனைகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு உத்தரவை மீறி பொது இடங்களில் சுற்றித் திரிந்து வருபவர்களுக்கு போலீசார் புது புது நூதன தண்டனைகளை நாள்தோறும் வழங்கி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ளது. இருப்பினும் பொது மக்கள் பலர் எந்த விழிப்புணர்வும் இல்லாமல் பைக்குகளில் சுற்றித் திரிகின்றனர். பணியில் இருக்கும் போலீசாரும் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றுவோருக்கு பல்வேறு தண்டனைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் தமிழக போலீசார் பல்வேறு விதமான நூதன தண்டனைகளை வழங்கி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இரவில் சிக்கிய மூன்று இளைஞர்களுக்கு தண்டனையாக தவளை போல தாவி சென்று தூரத்தில் நிற்கும் லாரியை தொட்டு வரச் செய்தனர். அதே போல சென்னையின் பல பகுதிகளிலும் போலீசார் புது புது தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.
குமணன் சாவடி அருகே சுற்றித் திரிந்த நபர்களை பிடித்த போலீசார், வெயிலில் சிறிய தூரம் ஓடிவிட்டு வந்து வண்டியின் சாவிகளை வாங்கிச் செல்ல அறிவுறுத்தினர். திருவொற்றியூர் பகுதியில் பணியில் இருந்த போலீசாரிடம் சிக்கியவர்களுக்கு வெயிலில் கொஞ்ச நேரத்திற்கு ஒற்றைக் காலில் நிற்கும்படி தண்டனை கொடுத்து அவர்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை போலீசார் ஏற்படுத்தினர்.
நாளுக்கு நாள் போலீசார் பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கிய போதும் சிலர் தொடர்ந்து எந்தவித காரணமும் இல்லாமல் பொதுவெளிகளில் சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.