இந்த முறை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர கூடாது… தமிழக அரசிடம் பீட்டா பரபரப்பு மனு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்2022-ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தக் கூடாது என தமிழ்நாடு அரசிடம் பீட்டா கோரிக்கை மனு அளித்துள்ளது.
ஒமைக்ரான் பரவல் நாடு முழுவதும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் போன்ற அத்தியாவசியம் இல்லாத நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என பீட்டா இந்தியா அமைப்பின் சிஇஓ மணிலால் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் ஒமைக்ரான் பரவல் மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. கொரோனா தடுப்பூசி அவசியம் குறித்து பலரும் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
ஒமைக்ரான் பரவல்:
ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் வருகிற ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. புத்தாண்டு தினத்தைக் கொண்டாட மக்கள் சென்னை மெரினா உட்பட கடற்கரைகளில் கூட்டம் சேரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கும் தடை விதிக்க வேண்டும் என பீட்டா கோரிக்கை வைத்துள்ளது.
ஜல்லிக்கட்டு:
தமிழ்நாட்டில் மதுரையில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய ஊர்களில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்ட போது தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடினார். சென்னை முதல் குமரி வரையில் இந்தப் போராட்டம் பெரும் எழுச்சி உடன் நடைபெற்றது.
இளைஞர்கள் போராட்டம்:
இளைஞர்களின் மாபெரும் போராட்டத்தின் காரணமாக தமிழ்நாடு அரசின் சார்பாக அவசர சட்டம் இயற்றப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த சூழலில், “ஒமைக்ரான் என்னும் வைரஸ் தாக்குதலால் நாடே பதற்ற சூழலில் பெரும் போராட்டத்துக்கு நடுவே வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அத்தியாவசியமற்ற ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது.
பொதுமக்களை கொடி நோய் பரவலில் இருந்து காப்பாற்றவும், காளைகளை கொடுமைகளில் இருந்து காக்கவும் ஜல்லிகட்டுக்கு இந்த ஆண்டு அனுமதி தரக்கூடாது” என பீட்டா சிஇஓ மணிலால் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.