புது கொரோனா ரகங்கள்: 6 மாசத்துக்கு ஒரு முறை பூஸ்டர் தடுப்பூசி போட்டுகிட்டு வாழ்ற நிலை வரலாம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்புதுப்புது கொரோனா ரகங்கள் நாளுக்கு நாள் அறிமுகமாகி நம்மை பதற்றத்தில் வைத்திருக்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால் மக்கள் 6 மாதத்துக்கு ஒரு முறை என பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டு இனி வரும் காலங்களில் வாழ நேரிடலாம் என ஆஸ்திரேலியா ஃபார்மஸி அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் ஒரு வகையான ஒமைக்ரான் குறித்தே நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அதற்குள் அடுத்த ரகமான ëடெல்மைக்ரான்í ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பரவத் தொடங்கி உள்ளது. ஆராய்ச்சியாளர்கள், டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ்களின் கூட்டே டெல்மைக்ரான் என விளக்கி உள்ளனர். டெல்டா மற்றும் ஒமைக்ரான் ரகங்களை விட ëடெல்மைக்ரான்í அதி வேகமாகப் பரவும் திறன் கொண்டது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃபார்மஸி அமைப்பின் தலைவர் ட்ரெண்ட் வோமே கூறுகையில், “கொரோனா வைரஸின் புது ரகங்கள் பரவிக் கொண்டே இருக்கும் சூழலைப் பார்த்தால் நாம் இன்னும் நீண்ட நாட்களுக்கு ‘மாஸ்க்’ அணியும் பழக்கத்தை தொடர வேண்டியதாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
அதேபோல், இனி அடுத்த பல வருடங்களுக்கு நம் வாழ்வில் 6 மாதத்துக்கு ஒரு முறை ஒரு கொரோனா பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டு வாழும் நிலையும் வரலாம். ஆச்சர்யப்படுவதற்கு எதுவும் இல்லை. இதை நாம் ஏற்றுக்கொண்டு வாழ்ந்தாக வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம். முழுவதும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும் இந்த புது கொரோனா ரகங்கள் பாதிப்பை ஏற்படுத்ததான் செய்கின்றன.
இதற்கு கொரோனா பூஸ்டர்கள் எடுப்பது தான் ஒரே வழி என நினைக்கிறேன். சில மருத்துவ அலோசனைக் குழுக்கள் 6 மாதத்துக்கு ஒரு பூஸ்டர் தடுப்பூசி என்பதை 3 மாதத்துக்கு ஒன்று என ஆக்குவதற்கு ஆலோசனை செய்து வருகின்றனர்” எனக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
இஸ்ரேல், ஜெர்மனி ஆகிய நாடுகள் ஏற்கெனவே பூஸ்டர் தடுப்பூசிகளை கட்டாயம் ஆக்கிவிட்டன. இன்னும் சில நாட்களில் ஐரோப்பிய நாடுகள் பல தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளது. ஐக்கிய நாடுகளில் நான்காம் தவணை தடுப்பூசி குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், “எந்த ஒரு நாடும் இந்த கொரோனா பேண்டெமிக் சூழலில் இருந்து தப்பித்து விடலாம் என எளிதில் சொல்லிவிட முடியாது. தற்போதைய தடுப்பூசிகளே ஒமைக்ரான் மற்றும் டெல்டா ரக கொரோனா வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளது.