‘கொரோனாவை நெனச்சு கொஞ்சம் கூட பயமில்லை’.. அடுத்த கோயம்பேடு மார்க்கெட்டா மாற ரெடியாகும் காய்கறி சந்தை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோயம்பேடு மார்க்கெட் போல ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் மக்கள் சமூக இடைவெளி இன்றி கூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தழிழகத்தில் இதுவரை 8,718 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 4,882 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு இல்லாத சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ள விதிகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் கொரோனா அச்சமின்றி மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக வந்து சென்றனர். ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக வந்து சென்றதன் விளைவாக அதிக நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. தற்போது ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையிலும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூடுவதால் அடுத்த கோயம்பேடு மார்க்கெட்டாக மாற வாய்ப்பு உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
