#BREAKING: ‘கட்சிக்கு இவர்’!.. ‘ஆட்சிக்கு இவர்’!.. வெளியானது ‘அதிமுக’வின் அதிகாரப்பூர்வ முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை, இழுபறியை கடந்து சுமுகமான முறையில் சமரச உடன்படிக்கை ஏற்பட்டதை அடுத்து இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரில் யார் அடுத்த அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் என்கிற அறிவிப்பு இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 8.45 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்னையிலுள்ள இல்லத்தில் இருந்து புறப்பட்டு அதிமுக அலுவலகம் வந்தார்.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். முன்னதாக முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் விடிய விடிய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு மத்தியில் முதல்வர் வேட்பாளர் யார் அறிவிக்கப்படவிருப்பதாகவும் முன்கூட்டிய தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதன்படி தொண்டர்களின் உற்சாக வரவேற்புக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கூட்டாக 10 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பதாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி, 2021-ஆம் வருடம் நிகழவுள்ள தமிழகத் தேர்தலில் ‘அதிமுகவின் அதிகாரப்பூர்வ முதல்வர் வேட்பாளர்’ என்று தற்போதைய முதல்வர் ‘எடப்பாடி பழனிசாமி’தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிவித்த ஓ.பன்னீர்செல்வம், “இந்த வரலாற்று இயக்கத்தை எந்த நோக்கத்துக்காக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கினாரோ, அந்த கனவை உச்சநிலைக்கு கொண்டு போனார் இதய தெய்வம் அம்மா. அந்த கனவை தொண்டர்கள் முன்னிலையில் முன்னிறுத்தி கட்சியிலும் ஆட்சியிலும் சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். மதுசூதனன், முனுசாமி, வைத்திலிங்கம், கழக நிர்வாகிகள், வழிகாட்டுதல் குழுவினர் உள்ளிட்டோர் தலைமையில் நடந்த ஆலோசனையில் அதிமுக சார்பில் முதலமைச்சர் வெற்றி வேட்பாளராக அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களை முன்னிறுத்துவதாக தீர்மானம் நிறைவேறியதை நான் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு தொடர்பான அறிவிப்பும் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.