தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 01, 2020 07:35 PM

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை இன்று (01.10.2020) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

CM Edappadi Palanisamy launches One Country One Ration scheme

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், பொது விநியோகத் திட்டத்தின் ஒருங்கிணைந்த மேலாண்மைக்கான ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தினை தமிழ்நாட்டில் துவக்கி வைத்து, 3 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.

பொது விநியோகத் திட்டம் 330 கோடி ரூபாய் செலவில் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக புழக்கத்திலிருந்த குடும்ப அட்டைகளுக்கு பதிலாக ஆதார் எண் விவரங்களின் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டம் 2017-ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டு, தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மின்னணு குடும்ப அட்டைகள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களை, தங்களின் விருப்பத்திற்கேற்ப தமிழ்நாடு முழுவதும் எந்த ஒரு நியாயவிலைக் கடையிலும் பெறத்தக்க வகையில் குடும்ப அட்டைகளின் மின்னணு முறை மாநில அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் ஒருங்கிணைந்த மேலாண்மைக்கான மத்திய அரசின் திட்டத்தின் கீழ், குடும்ப அட்டைதாரர்கள் சொந்த மாநிலத்திலிருந்து இடம்பெயரும்போது, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி உரிம அளவிலான உணவு தானியங்களை தேசிய அளவில் எங்கு வேண்டுமானாலும் பெறத்தக்க வகையில் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தினை தமிழ்நாட்டில் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கூறிய திட்டத்தினை செயல்படுத்துவதற்கு ஏதுவாக தற்போது நியாயவிலைக் கடைகளில் பயன்பாட்டிலுள்ள விற்பனை இயந்திரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தேசிய அளவில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களது சொந்த மாநிலத்தைவிட்டு இடம்பெயரும்போது, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி உரிம அளவிலான உணவு தானியங்களை தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெறத்தக்க வகையிலும், புலம்பெயர் குடும்பங்கள் தாங்கள் ஏற்கனவே வைத்துள்ள குடும்ப அட்டை விவரங்களின் அடிப்படையில் உணவு தானியங்கள் பெறத்தக்க வகையிலும், ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தினை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.

இத்திட்டம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் 01.10.2020 முதல் செயல்படுத்தப்படும். மேலும், தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், இராமநாதபுரம், மதுரை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் 16.10.2020 முதல் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு புலம்பெயரும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி தங்களுக்குண்டான உணவு பொருட்களை உடற்கூறு முறையிலான தகவல் உறுதிப்படுத்துதல் மூலம் இடம்பெயரும் மாநிலத்தில் பெற்றுக்கொள்ளலாம். பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு இடம்பெயரும் குடும்ப அட்டைதாரர்கள், தாங்கள் ஏற்கனவே வைத்துள்ள குடும்ப அட்டையினை கொண்டு, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி உரிய அளவிலான உணவு பொருட்களை மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட விநியோக விலையில் தங்களின் வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் உடற்கூறு முறையிலான தகவல் உறுதிப்படுத்துதல் மூலம் பெறலாம். இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் எந்தவித இடையூறுமின்றி உணவு தானியங்களை பெற்றுப் பயனடையலாம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் தொழில்நுட்ப காரணங்களினால் உடற்கூறு முறையிலான தகவல் உறுதிப்படுத்துதலை மேற்கொள்ள இயலாத நிலையில், தற்போதுள்ள மின்னணு குடும்ப அட்டை மற்றும் ஆதார் தொடர்புடைய கைப்பேசிக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல், ஆதார் கார்டு மற்றும் தற்போதுள்ள நடைமுறையான குடும்ப அட்டை ஸ்கேனிங் முறையை பின்பற்றியும் அத்தியாவசியப் பொருள்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், வயது முதிர்ந்தோர் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேரில் வர இயலாத பயனாளிகள் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, உணவுத்துறை அமைச்சர் இரா. காமராஜ், தலைமைச் செயலாளர் திரு. க.சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் எம். சுதா தேவி உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. CM Edappadi Palanisamy launches One Country One Ration scheme | Tamil Nadu News.