''எம்.ஜி.ஆர் அவர்களே காத்திருந்து வாய்ப்பளித்த இன்னிசை நிலா"... 'எஸ்.பி.பியின் மறைவு குறித்து'.. 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருக்கம்!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 25, 2020 07:32 PM

பாடகர் எஸ்.பி.பியின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

TN CM Edappadi Palaniswami Mourns Death Of Singer SPB

பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து தொடர் சிகிச்சையால் கொரோனாவில் இருந்து மீண்ட அவர் இன்று மாரடைப்பால் காலமானார். அவருடைய மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், எஸ்.பி.பியின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், "தமிழ்நாட்டு மக்களை தேனினும் இனிமையான தனது குரலால் கவர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும், திரைப்பட நடிகருமான எஸ்.பி.பி என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

இந்திய இசை உலகத்துக்கு 20ஆம் நூற்றாண்டில், இறைவன் அளித்த இனிய கொடையாக வந்து உதித்தவர். 'ஆயிரம் நிலவே வா' என்ற புகழ்மிக்க பாடலை எஸ்.பி.பிதான் பாட வேண்டும் என்று காத்து இருந்து வாய்ப்பு அளிக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆரின் இதயத்தில் இடம் பெற்ற இன்னிசை நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியன். அன்னாரது குரலில் நேற்றும், இன்றும், நாளையும் ஒலிக்கும் 'தங்கத் தாரகையே வருக வருக... தமிழ் மண்ணின் தேவதையே வருக வருக...' என்ற ஜெயலலிதாவின் புகழ் பாடும் பாடல் கழகத்தின் வரலாற்றில் என்றும் இணைந்திருக்கும்.

எஸ்.பி.பியின் குரல் இனிமைக்கு நிகர் அவரே. மிக அதிகமான பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்து புகழின் உச்சிக்கே சென்றவர். அவர், பாடகர், நடிகர், பின்னணி குரல் இசையமைப்பாளர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவர். கலைமாமணி விருது, தேசிய விருது, பல மாநில விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர். தனது ஈடு இணையற்ற குரல் வல்லமையால் தமிழ் திரைப்பட உலகுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த எஸ்.பி.பாலசுப்ரமணியனின் மறைவு திரைப்படத்துறைக்கும், கலை உலகிற்கும் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. TN CM Edappadi Palaniswami Mourns Death Of Singer SPB | Tamil Nadu News.