"'தினேஷ் கார்த்திக்' வேணாம்... 'மோர்கனும்' வேணாம்... அடுத்த 'சீசன்'ல இவர 'கேப்டனா' போடுங்க..." 'கொல்கத்தா' அணிக்கு 'ஐடியா' கொடுத்த 'ஆகாஷ் சோப்ரா'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதற்போது நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நூலிழையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
அந்த அணியில் மோர்கன், தினேஷ் கார்த்திக், ரசெல், நரைன், கம்மின்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் இருந்த போதும் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் சொதப்பிய நிலையில் லீக் சுற்றுடன் வெளியேறியது. லீக் சுற்றின் முதல் பாதியில் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியை வழிநடத்தி வந்த நிலையில், அதன்பிறகு அவர் தனது கேப்டன் பதவியை துறந்தார்.
அதன்பிறகு மோர்கன் அணியை வழிநடத்தினார். இரண்டாவது பாதியில் மோர்கன் தலைமையில் 4 வெற்றிகள் தேவையாக இருந்தது. ஆனால், 3 போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்ற கொல்கத்தா அணி, தொடரில் இருந்து வெளியேறியதால் மோர்கன் கேப்டன்சியும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா அடுத்த சீசனில் கொல்கத்தா அணியை இளம் வீரர் சுப்மான் கில் தலைமை தாங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 'அடுத்த சீசனுக்கான ஏலம் நடைபெறும் போது கில், வருண் சக்ரவர்த்தி, ரசெல் ஆகியோரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். டெல்லி அணியை இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக தலைமை தாங்கி வருவது போல கொல்கத்தா அணியை கில் வழிநடத்த வேண்டும். இதற்கு பலம் வாய்ந்த பயிற்சியாளரை கொண்டு கில்லை சிறந்த கேப்டனாக சீரமைக்க வேண்டும்.
கில்லை கொல்கத்தா அணியில் வெளியே விட்டால் மற்ற அணிகள் அவரை எடுத்துக் கொண்டால், மும்பை அணிக்கு ரோஹித் செய்ததை போன்று அவர் வேறு அணிக்கு செய்து கொடுக்க வாய்ப்புகள் அதிகமுண்டு. கில்லிடம் சிறந்த தலைமை பண்பு தெரிந்தால், அவரை கொல்கத்தா அணி சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மோர்கனை கேப்டனாக நியமிப்பது என்பது சிறந்த ஆலோசனையாக தெரியவில்லை. அவரை வெளியேற்றி விட்டு கொல்கத்தா அணிக்கு தேவை என்றால் RTM முறையில் அவரை மீண்டும் அணியில் தக்க வைத்துக் கொள்ளலாம்' என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.