திருச்சி அருகே மகன் இறந்த வழக்கில் கைதான தாய் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

திருச்சி உறையூர் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் பத்மநாபன். இவருடைய மனைவி புனிதா (வயது 58). இவர்களுக்கு சாந்தினி என்ற மகளும், விஜயராகவன் (27வயது) என்ற மகனும் உள்ளனர். கடந்த ஆண்டு உடல்நிலை குறைவால் பத்மநாபன் இறந்துள்ளார்.
மகன் விஜயராகவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் திடீரென விஜயராகவன், கத்தியால் கழுத்தை வெட்டி உயிரை மாய்த்துக் கொண்டதாக, தாய் புனிதா காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் விஜயராகவன் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில், விஜயராகவனை யாரோ தலையில் அரிவாளால் தாக்கி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் தாய் புனிதாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த போலீசார், மகன் விஜயராகவன் கடந்த சில தினங்களாக தாய் புனிதாவுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த புனிதா அரிவாளால் மகனை தாக்கி கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தாய் புனிதா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். பெற்றை மகனை தாய் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
