சாத்தான்குளம் நள்ளிரவு கைதுக்கு முன்... ஜெயராஜ் குடும்பத்திடம் 'சிபிசிஐடி' சொன்ன 'அந்த ஒரு வார்த்தை'! - பாராட்டி தள்ளிய நீதிபதிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக காவலர்களை கைது செய்த சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சாத்தான்குளத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று விசாரணையத் தொடங்கினர். 2 டி.எஸ்.பிக்கள், 10 ஆய்வாளர்கள், 15 காவலர்கள் உட்பட 12 குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., அனில்குமார் தலைமையிலான குழுவினர், ஜெயராஜின் வீட்டில் ஜெயராஜின் மனைவி செல்வராணி, மூன்று மகள்கள் ஆகியோரிடம் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார்.
"உங்க கணவர் ஜெயராஜ், மகனுக்கு நடந்ததைப் பயப்படாமச் சொல்லுங்க" என போலீஸார் முதலிலேயே தைரியம் கொடுத்ததும், முதலில் செல்வராணி பேசினார். அன்று இரவு கணவரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றது, அப்பாவைத் தேடி மகன் பென்னிக்ஸ் போலீஸ் ஸ்டேஷன் சென்றது முதல் மறுநாள் காலை வரை நடந்த சம்பவம் பற்றிக் கண்ணீருடன் கூறினார். மூத்த மகள் பெர்சி, "போலீஸாரின் முரணான எப்.ஐ.ஆர் பதிவு, பிரேதப் பரிசோதனைக்கு முன்பான இருவரது உடல்களில் தென்பட்ட காயங்களின் தன்மை, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு இரவில், இருவரது உடல்களைப் பெற்றுச் செல்லுமாறு இரண்டு மருமகன்களையும் போலீஸார் மிரட்டியது குறித்து விளக்கியுள்ளார்.
இதுதவிர குடும்பத்தினரின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, மதியம் 3 மணிக்கு சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி சங்கர், எஸ்.பி., விஜயகுமார் ஆகியோர் ஜெயராஜின் இல்லத்திற்குச் சென்று, 'உங்க கணவர், மகன் உயிரிழப்பு வழக்கை நாங்க விசாரணைக்கு எடுத்திருக்கோம். விசாரணை நல்லமுறையில் சென்றுகொண்டிருக்கிறது. கவலைப்படாதீங்கம்மா' எனச் சொன்னார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு, 'இவ்வழக்கை இன்றுதான் தொடங்கியிருக்கோம். இன்று இரவுக்குள் பல அதிரடி நடவடிக்கைகள் உங்களுக்கே தெரியவரும்' எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். அவர் சொன்னது போலவே, இரவு 7 மணிக்கு எஸ்.ஐ ரகுகணேஷை விசாரணைக்கு அழைத்து, விசாரணையின் இறுதியில் கைது செய்தது. இரவு 11.30 மணிக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், பேரூரணி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
5 காவலர்களை கைது செய்த சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி உருவாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட தந்தை, மகன் குடும்பத்துக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடியின் நடவடிக்கை அமைந்துள்ளது என்றனர்.
மேலும், சாத்தான்குளம் சம்பவம் போல் இனிமேல் தமிழகத்தில் எங்கும் நடக்கக்கூடாது. சமுதாய வாழ்க்கை முன்னேறிய நிலையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடிப்பது இயல்புக்கு மாறானது. 24 மணிநேரத்தில் சிறப்பான நடவடிக்கை எடுத்ததன் மூலம் தமிழக காவல்துறையினர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்
