VIDEO: "சாப்பாடு கொடுக்கல... போலீஸ் அராஜகம் பண்றாங்க"!.. கூச்சலிட்ட மீரா மிதுன்!.. தரதரவென இழுத்து சென்ற போலீஸ்!.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகை மீரா மிதுன் கைது செய்யப்ட்டதை அடுத்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுன் நேற்று கேரளாவில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தற்பொழுது சென்னை அழைத்துவரப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட மீராமிதுனிடம் தற்பொழுது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று (14.8.2021) கேரள மாநிலம் ஆலப்புழாவில் தெரிந்தவர் ஒருவருடைய நட்சத்திர விடுதியில் மீரா மிதுன் தங்கி இருந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நேரடியாக அங்கு சென்று அவரை கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்படும்போது அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தனக்கு எதிராக காவல்துறையினர் அராஜகமாக செயல்படுவதாக வீடியோ பதிவையும் வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக கேரள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீரா மிதுன், போலீஸ் வாகனம் மூலமாக தற்பொழுது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
அப்போது அங்கு குழுமியிருந்த செய்தியாளர்களிடம், காவல்துறை அராஜகம் செய்வதாகவும், தனக்கு 24 மணி நேரமாக சாப்பாடு கொடுக்கவில்லை என்றும், தனது கையை போலீசார் உடைத்து விட்டதாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார். மேலும், இதற்கு முன்னதாக தான் போலீசிடம் புகார் அளித்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், தான் ஒரு வெற்றிகரமாக நடிகையாக வலம் வருவதை தடுக்கவே இந்த கைது நடந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, சென்னை அழைத்து வரப்பட்ட மீரா மிதுனிடம் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். அவர் பட்டியலினத்தவர்களை இழிவாக பேசியது தொடர்பான வீடியோக்களை ஆதாரமாக வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணைக்கு பின்னர் மீரா மிதுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அதன்பிறகு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்குமூலம் தராமல் மீரா மிதுன் அடம்பிடிப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குமூலம் தர மறுக்கும் மீரா மிதுன் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்து வருகிறார் எனவும் கூறப்படுகிறது. 'தனது வழக்கறிஞர் வந்தால் மட்டுமே பேசுவேன்' என தொடர்ந்து அடம்பிடித்து வருகிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

மற்ற செய்திகள்
