'வலுக்கட்டாயமாக தாலி கட்டும் ஹீரோ'!.. வைரலாகும் புதிய சீரியலின் ப்ரோமோ!.. தண்டனை விவரங்களை பதிவிட்டு... எச்சரிக்கை விடுத்த ஐபிஎஸ் அதிகாரி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விஜய் டிவி-இன் புதிய சீரியல் ப்ரோமோவுக்கு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐ.பி.எஸ் ட்விட்டரில் தெரிவித்த கருத்து சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
'தென்றல் வந்து என்னை தொடும்' என்ற சீரியலில், 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' வினோத் பாபு, 'ஈரமான ரோஜாவே' பவித்ரா ஜனனி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அமெரிக்கவில் படித்துவிட்டு ஊர் திரும்பும் பவித்ரா, பாரம்பரியத்தை மறக்காமல் இருப்பதாக கோயிலில் பாட்டி ஒருவர் புகழ்கிறார். கல்யாண பொண்ணு பேருக்கு தானே அர்ச்சனை? எனக் கேட்பதிலிருந்து அவருக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருப்பது தெரிய வருகிறது. அந்த நேரத்தில் பெற்றோர்களுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொள்ளும் இருவரை மிரட்டி, அடாவடியாக, அந்தப் பெண் கழுத்தில் இருக்கும் தாலியை கழட்ட செல்கிறார் சீரியலின் ஹீரோ வினோத் பாபு.
அப்போது அங்கு வரும் ஹீரோயின் பவித்ரா, 'இது என்ன காட்டு மிராண்டி தனம்.. அம்மன் சாட்சியா கல்யாணம் நடந்திருக்கு. இதை அவிழ்க்க உனக்கு என்ன உரிமை?' என்று ஆவேசமாக கேட்கிறார். 'ஒரு மஞ்ச கயித்த கட்டுனா, உடனே அதுக்கு பேர் கல்யாணமா?' என்று எதிர்கேள்வி எழுப்பி, சாமி கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்து பவித்ரா கழுத்தில் கட்டிவிட்டு, நெற்றியில் குங்குமமும் வைத்து விட்டு, 'இப்போ நான் உனக்கு தாலி கட்டிட்டேன், பொட்டும் வச்சிட்டேன், நீ என்ன எனக்கு பொண்டாட்டியா? போவியா' என்று சொன்னவாறு அங்கிருந்து புறப்படுகிறார் வினோத்.
இந்த புது சீரியலின் ப்ரோமோ, மிகவும் பிற்போக்குத் தனமாக இருப்பதாகவும், 'திருமணம் ஆகிவிட்டால் தாலியை கழட்ட கூடாது', 'ஒரு பெண்ணின் சம்மதம் இன்றி அவருக்கு தாலி கட்டினால் கூட, அவர் அந்த ஆணுக்கு மனைவியாக வாழ வேண்டும்' போன்ற பிற்போக்கு தனமான சிந்தனைகள் சீரியல் மூலமாகத்தான் இன்னும் சமூகத்தை விட்டு அகலாமல் இருப்பதாகவும், இம்மாதிரியான காட்சிகள் சமூகத்தை விஷமாக்குவதாகவும், பெண்கள் மீதான வன்முறைகளை அதிகப்படுத்துவதாகவும் இணையத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சீரியலின் ப்ரோமோவுக்கு ரியாக்ட் செய்துள்ள திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐ.பி.எஸ், தமிழகத்தில் பெண்களை துன்புறுத்துவதற்கு கொடுக்கப்படும் தண்டனைகள் குறித்த விளக்கத்தை அளித்துள்ளார்.
அந்த வகையில், TN prohibition of Harassment of Woman Act, பிரிவு 4-ன் படி, கல்வி நிலையங்கள், கோயில் மற்றும் இதர வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையம், சாலை, ரயில்வே நிலையம், சினிமா தியேட்டர், பார்க், பீச், திருவிழா நடக்கும் இடங்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் பெண்களை துன்புறுத்துவர்கள் மீது, அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், குறைந்தது 10,000 ரூபாய் இழப்பீடும் வசூலிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.
— Dr.Varun Kumar IPS (@VarunKumarIPSTN) July 26, 2021
இந்த சீரியலின் ப்ரோமோவை நெட்டிசன்கள் மட்டுமே விமர்சித்து வந்த நிலையில், காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிகழ்வு பெரும் பேசுபொருளாகியுள்ளது.