'மளிகை தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்...' 'உற்பத்தி இல்லாததால் தட்டுப்பாடு நிலவ வாய்ப்பு...' பொருட்களை 'வாங்கிக் குவிக்க' வேண்டாம் என 'வேண்டுகோள்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Apr 08, 2020 10:05 AM

மளிகை பொருட்கள் 40 சதவீதம் அளவிற்கு மட்டுமே வருவதால் நிச்சயம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

may groceries things shortage happened says vikramaraja

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான உற்பத்தித் தொழிற்சாலைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. தற்போது ஸ்டாக் இருக்கும் வரை சில்லரை வணிகர்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இருப்பு தீர்ந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளதால் மளிகைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா, ’உற்பத்தி தொழிற்சாலையில் 80% பணியாட்கள் வராமல் இருப்பதால் போதிய உற்பத்தியை செய்யமுடியாமல் உற்பத்தியாளர்கள் சிக்கலில் இருந்து வருகின்றனர். உற்பத்தி செய்தால் மட்டுமே கடைகளுக்கு பொருட்களை கொண்டுவர முடியும். மிளகு, கடுகு, சீரகம் போன்ற பொருள்கள் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து கொண்டுவரப்படுகிறது. ஆனால் அங்கிருந்து எல்லாம் பொருள்களை ஏற்றிய பிறகு வாகனங்கள் புறப்பட அனுமதிக்கப்படுவதில்லை. எனவே இரு மாநில முதல்வர்களும் இதில் உள்ள சிக்கலைத் தீர்க்க வேண்டும்." எனத் தெரிவித்தார்.

மேலும், "பொதுமக்கள் தற்போது இருக்கக்கூடிய நிலையில் தேவைகளுக்கு அதிகமாக பொருட்களை  வாங்கிக் குவிக்க வேண்டாம் என்றும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும்" அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

"ஆனால் அச்சம் காரணமாக பொருட்களை அதிகம் வாங்கிக்கொண்டு வீடுகளில் வைத்தால் விரைவில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் வந்துவிடும். அதேபோல பிராண்டட் பார்த்து வாங்க வேண்டிய கட்டத்தில் நாம் இல்லை என்பதால், தற்போதைய சூழலில், கிடைக்கக்கூடிய பொருளை வாங்கிக் கொள்ள வேண்டிய மனநிலை வேண்டும்" என்றும் விக்ரமராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.