விடுமுறை எடுக்காமல் 'உண்மையை' மறைத்து... வசமாக 'சிக்கிக்கொண்ட' அரசு அதிகாரி... 3 பிரிவுகளின் கீழ் 'வழக்கு' பாய்ந்தது!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Apr 07, 2020 11:06 PM

டெல்லிக்கு சென்று மாநாட்டில் கலந்து கொண்ட விஷயத்தை மறைத்து அலுவலகம் சென்று வந்த அதிகாரி மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Telangana Govt Official Tests Covid-19 Positive, booked for Cover-Up

டெல்லியில் உள்ள தப்லீக் ஜமாத்தில் கடந்த மார்ச் 13 முதல் 15 வரை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் இந்தியர்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டனர். அதில் பங்கேற்றவர்கள் பலரும் அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்த பின்பும் அங்கு தங்கியிருந்து உள்ளனர். அங்கு கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் காவல்துறையிடம் தங்களைப்பற்றி தகவல் அளித்து, தாங்களாகவே பரிசோதனை செய்துகொள்ள முன் வரவேண்டும் என்று மாநில அரசுகள் பலவும் வெளிப்படையாக அறிவித்தன.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் ஜன்கானா மாவட்டத்தை சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் விடுப்பு எதுவும் எடுக்காமல் அந்த மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு, தெலுங்கானா திரும்பி இருக்கிறார். தொடர்ந்து அவர் வழக்கம்போல அலுவலகம் சென்று தன்னுடைய பணிகளை கவனித்து வந்துள்ளார். சமீபத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பரிசோதனை செய்த அதிகாரிகள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்து அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த 60 பேரை சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதித்து இருக்கின்றனர். அரசு அதிகாரிகள் பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றால் விடுமுறை எடுத்து அரசு அனுமதி பெற்றே செல்ல வேண்டும். ஆனால் அவர் விடுமுறை எதுவும் எடுக்காமல் நிகழ்ச்சிக்கு சென்று இருக்கிறார். அதோடு அது தொடர்பான உண்மையையும் அவர் மறைத்ததால் தற்போது தெலுங்கானா போலீசார் அவர்மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.