"வேலையை உதறிவிட்டு 300க்கும் மேற்பட்ட நர்சுகள் எடுத்த அதிரடி முடிவு!".. 'கொரோனா' சூழலில் 'திணறும்' மாநில அரசு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 18, 2020 12:19 PM

மம்தா பானர்ஜி முதல்வராக இருந்து ஆட்சி செய்யும் மேற்குவங்கத்தில் கொரோனா வைரஸால் 2, 575 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 230க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.  (இணைப்பு: கோப்புப்படம்)

more than 300 nurses resigns and left from west bengal hospitals

இந்த நிலையில் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இருந்து மணிப்பூர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நர்சுகள் வேலைகளை விட்டுவிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வார ஆரம்பத்தில் 185 நர்சுகளும், பின்னர் சனிக்கிழமை அன்று 169 பேரும் என மணிப்பூர், திரிபுரா, ஒடிசா, ஜார்க்கண்ட் பகுதிகளில் உள்ள தத்தம் சொந்த ஊர்களுக்கு கிட்டத்தட்ட 300 நர்சுகள் சென்றுவிட்டதாக வங்காள அரசின் தலைமை செயலாளர் ராஜீவா சின்காவுக்கு கொல்கத்தாவின் கிழக்கு இந்திய மருத்துவமனை சங்கத்தலைவர் பிரதீப் லால் மேத்தா கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே தங்கள் மாநிலங்களைச் சேர்ந்த நர்சுகள் சொந்த மாநிலங்களுக்கு  திரும்பினால் அரசு உதவித் தொகை வழங்குவதாக வெளியான தகவல்களை மணிப்பூர் முதல்வர் நோங்தாம்பம் பிரேன் சிங் மறுத்ததோடு,  “எம் மாநில நர்சுகள் கொல்கத்தா, டெல்லி, சென்னை உள்ளிட்ட பிற மாநில நகரங்களில் பணிபுரிவதை பெருமையாகக் கருதுகிறோம். அதே சமயம் அவர்கள் அங்கிருக்கும் மருத்துவமனைகள் வசதியானதாக உணரவில்லை என்று முடிவு செய்து சொந்த ஊருக்கு திரும்புவது அவர்கள் விருப்பம். யாரும் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது!” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொல்கத்தாவில் இருந்து மணிப்பூர் வந்து சேர்ந்த நர்சு ஒருவர் கூறும்போது, “எங்களுக்கு எங்கள் பெற்றோரும் குடும்பமும் முக்கியம் என்பதால் நாங்கள் எடுத்த முடிவுதான் இது” என்று தெரிவித்துள்ளார்.  இதனால் கொல்கத்தாவில் இந்த கொரோனா சூழலில் நர்சுகளுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.