செய்யாறு அருகே, 4 வயது சிறுவனை கொலை செய்ததாக வினோத் குமார் என்பவரை கைது செய்துள்ளதாக தூசி காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மரணமடைந்த சிறுவனின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகாத உறவு
கடலூர் மாவட்டம் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மனைவி நர்மதா. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் சசிகுமார் உயிரிழந்ததை அடுத்து 26 வயதான நர்மதா தனது நித்திஷ் (6), சித்தார்த்தா (4) என்ற இரு மகன்களுடன் வசித்துவந்தார். தனியார் வங்கி ஒன்றில் நிதி வசூல் செய்யும் வேலை செய்துவந்த நர்மதாவிற்கும் பண்ருட்டியை சேர்ந்த வினோத் குமார் என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், செய்யாறு சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஷூ தயாரிப்பு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார் நர்மதா. இதனால் அருகில் உள்ள ஆக்கூர் கிராமத்தில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்த நர்மதா அதே வீட்டில் வினோத் குமார் மற்றும் தனது இரு மகன்களுடன் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது.
வினோத் குமாருக்கு குடிப் பழக்கம் இருப்பதாகவும் இதன் காரணமாக நர்மதாவுடன் அவர் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்ததாகவும் காவல்துறை விசாரணையில் சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, நர்மதான வழக்கம்போல பணிக்குச் சென்றுள்ளார்.
விபரீதம்
பணிக்குச் சென்று மாலை வீடு திரும்பிய நர்மதா, வீட்டினுள் தனது மகன் சித்தார்த்தா இரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து திடுக்கிட்டதாகவும் உடனடியாக அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்ததாகவும் காவல்துறையில் அவர் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அருகில் வசிப்பவர்களின் உதவியுடன் சித்தார்த்தாவை அருகில் உள்ள மாமண்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் முன்னரே சிறுவன் மாரணமடைந்து விட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.
இதனால் நொறுங்கிப்போன நர்மதா இதுகுறித்து தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கை பதிவு செய்து விசாரணையில் இறங்கினார் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை.
இந்நிலையில், சித்தார்த்தாவின் கால்களைப் பிடித்து வினோத் குமார் சுவரில் அடித்ததால் சிறுவன் மரணமடைந்ததாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. இதையடுத்து, வினோத் குமாரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
4 வயது சிறுவனை கொலை செய்த வழக்கில் இளைஞர் கைதாகி இருப்பது செய்யாறு பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
