'முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்...' 'திமுக-வில் இணைந்தார் மகேந்திரன்...' - மநீம-வில் இருந்து விலகிய நிலையில் அதிரடி முடிவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்து, அக்கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் உள்பட 78 நிர்வாகிகள் திமுகவில் இன்று (08-07-2021) இணைந்தனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய மகேந்திரன், பத்மபிரியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இணைந்துள்ளனர்.
இதைத்தவிர, திமுகவில் இணையவுள்ள 11,000 பேரின் பெயர் பட்டியலையம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளார்.
இந்நிகழ்வில், அமைச்சர் துரைமுருகன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன். இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் கோயம்புத்தூர் பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் அதிகளவிலான வாக்குகளை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகேந்திரன் திமுக-வில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.