'எவ்வளவு சொன்னாலும் மக்கள் கேட்கலியே'... 'முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை'... கடுமையாகும் ஊரடங்கு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கைக் கடுமையாக அமல்படுத்துவது குறித்து டிஜிபி உள்ளிட்ட காவல் உயரதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திவருகிறார்.
கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதிமுதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 10-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வருகிற 24-ந்தேதி வரையில் அத்தியாவசிய கடைகளான காய்கறி, மளிகைக் கடைகள் மட்டும் காலை 6 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை திறந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் முழு ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டு இருந்தது. ஆனால் அரசாங்கம் பொது முடக்கத்தை அமல்படுத்தி இருந்தாலும், பொதுமக்கள் ஒத்துழைப்பு தராமல் தேவையில்லாமல் சாலைகளில் நடமாடுவது என்பது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த 3 நாட்களாக இது போன்று மக்கள் நடமாட்டம் அதிகரித்ததையடுத்து ஊரடங்கைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சென்னையில் நேற்று முதல் போலீஸ் நடவடிக்கையை தாங்களாகவே தீவிரப்படுத்தினர். நேற்று மாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திலும் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தக் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஊரடங்கு விதிகளைப் பலர் பின்பற்றாத சூழலில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவது குறித்து டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆலோசனை முடிவில் கடுமையான ஊரடங்கு குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.