'தாய் வீட்டிற்கு பிரசவத்திற்கு போன மனைவி'... 'ஓஹோ, என்ன காரியம் நடந்திருக்கு'... திரும்பி வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெற்றோர்கள் உதவியோடு இளைஞர் ஒருவர் செய்த மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த சதாசிவத்தின் மகள் ஜோதிமுருகேஸ்வரி. இவர் கடந்த 28.07.2021 ம் தேதி, கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் ''தனக்குக் கடந்த 30.01.2012 ம் தேதி கரூர் மாவட்டம் வெங்கமேடு VVG நகரைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் பாலசுப்பரமணி என்பவருடன் திருமணம் நடைபெற்றதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து திருமணத்திற்குப் பின்பு தன் கணவர் மற்றும் அவரின் பெற்றோருடன் மேற்கண்ட முகவரியில் வசித்து வந்ததாகக் கூறியுள்ளார். பிரசவத்திற்காக ஜோதிமுருகேஸ்வரி தனது தாயார் வீட்டிற்குச் சென்று விட்ட நிலையில் , கடந்த 01.01.2013 ம் தேதியன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் குழந்தையுடன் 3 மாதங்கள் கழித்து ஜோதிமுருகேஸ்வரி கரூர் வந்துள்ளார். அப்போது தான் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஜோதிமுருகேஸ்வரியின் கணவர் பாலசுப்பரமணிக்கு நித்யா என்ற பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இதைக் கேட்டு அவர் அதிர்ந்து போன நிலையில், பிரசவத்திற்குச் சென்று வந்த நேரத்திற்குள் இப்படி செய்யலாமா எனக் கேட்டுள்ளார். அதற்கு அவன் அப்படித்தான் இருப்பான் என்று பாலசுப்பிரமணியனின் பெற்றோர் கூறியுள்ளார்கள். அதோடு ஜோதிமுருகேஸ்வரியை துன்புறுத்தியும் வந்துள்ளார்கள். இதனால் ஜோதிமுருகேஸ்வரி அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டார்.
இதற்கிடையே பாலசுப்பிரமணியன் தகாத உறவு வைத்திருந்த நித்யாவோடு அவருக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் பாலசுப்பிரமணியனின் பெற்றோர் மற்றும் சகோதரிகளின் உதவியுடன் நடந்துள்ளது. அதன் பின்பு அவர்களுக்கும் தெரியாமல் சுதா என்ற பெண்ணை கடந்த 2020 ஜனவரியில் பாலசுப்பிரமணியன் திருமணம் செய்து கொண்டதாக ஜோதி முருகேஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் பாலசுப்பரமணி, அவரின் பெற்றோர்கள் மற்றும் அவரின் இரண்டாவது மனைவி நித்யா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் பலசுப்பிரமணியைக் கைது செய்து நீதிமன்ற காவல் சிறையில் அடைத்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பாலசுப்பிரமணிக்கு அவருடைய பெற்றோர்கள், பணம் மற்றும் நகைகளுக்கு ஆசைப்பட்டு மூன்று திருமணங்கள் நடத்தி வைத்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும் பாலசுப்பிரமணி பெண்களைக் கவர்வதில் கில்லாடியாக இருந்துள்ளார். முதல் மனைவியைத் திருமணம் செய்துகொண்டு அவர் அணிந்திருந்த நகை மற்றும் வரதட்சணையாகக் கொடுத்த பணத்தை வைத்து ஆனந்தமாகச் சுற்றி வந்துள்ளார். மீண்டும் முதல் மனைவியிடம் பணம் நகை கேட்டபோது கிடைக்காததால் அந்த பெண்ணை உதறிவிட்டு, தான் பணிபுரியும் தனியார் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளர் ஆக இருந்த நித்யா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அந்தப் பெண் கொடுத்த நகை மற்றும் வரதட்சணையை வைத்து வாழ்க்கையை ஆனந்தமாக நடத்தியுள்ளார்.
இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகள் இருந்து கொண்டு மூன்று திருமணங்களைச் செய்து வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். முதல் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கணவரைக் கைது செய்த போலீசார், ஏமாற்றிய கணவரின் பெற்றோர்கள் மற்றும் இரண்டாவது மனைவியைத் தேடி வருகின்றனர்.