"உங்களுக்கு பரிசு விழுந்திருக்கு".. இனிக்கும் பேச்சில் மயங்கி ஆன்லைனில் பணம் செலுத்தியவர்கள்!.. வீட்டுக்கு வந்த ‘பவர் பேங்கில்’ காத்திருந்த ‘ட்விஸ்ட்!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்குறைந்த விலையில் செல்போன் மற்றும் பவர்பேங்க் தருவதாக கூறியும், பரிசு விழுந்துள்ளதாக கூறியும் பெண்களை வைத்து போலியாக கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த கும்பலின் தலைவன் தலைமறைவாகியுள்ளான்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பி பிச்சனூர் பேட்டை சுப்பையா தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் அதிகமாக இளம் பெண்கள் அவ்வப்போது வந்து செல்வதை கண்ட அக்கம்பக்கத்தினர் சந்தேகித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலை அடுத்து அந்த வீட்டிற்கு விரைந்து சென்ற குடியாத்தம் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்திய போதுதான், அது ஒரு போலி கால்சென்டர் என்பதும் அங்கே 15-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
தமிழகத்தின் பல பகுதிகளில் வாடிக்கையாளர்களை தொலைபேசியில் அழைத்து அந்தப் பெண்கள் பரிசுப் பொருட்கள் உங்களுக்கு விழுந்திருக்கிறது என்று தெரிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளனர். பின்னர் குறைவான விலையில் செல்போன், பவர் பேங்க் ,சார்ஜர் உள்ளிட்டவற்றை அளிப்பதாகவும், ஆகவே ஆன்லைன் மூலம் பணம் கட்டக்கோரியும் இனிக்க இனிக்க பேசியுள்ளனர். இவர்களின் பேச்சில் மயங்கி பணம் செலுத்துபவர்களுக்கு பவர் பேங்க் வடிவத்தில் பிளாஸ்டிக் பொருளுக்குள் களிமண்ணை அடைத்து அனுப்பி வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் இந்த கும்பல்.
இதனை அறிந்த போலீஸார் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காகவே இப்படி களிமண்ணால் நிரப்பப்பட்ட பவர் பங்குகளை அவர்கள் தயாரித்துள்ளதை கண்டுபிடித்து விட்டனர். இந்த பவர் பேங்க்கை கைப்பற்றிய போலீசார் களிமண்ணால் செய்யப்பட்டு இருந்த பவர் பேங்க்கை உடைத்து, அது குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்களையும், லேப்டாப்களையும் கைப்பற்றியதுடன், அங்கிருந்த 15 பெண்களில் பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். மேலும் இந்த மோசடிக்கு காரணமாக இருந்த திருப்பத்தூரைச் சேர்ந்த 33 வயதான சுரேஷ் என்கிற வேலாயுதம் என்பவரை தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
