'பப்ஜி விளையாடனும்...' 'நெட்பேக் காலி...' 'ரீசார்ஜ் செய்ய பணம் தராததால்...' சிறுவன் எடுத்த விபரீத முடிவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பப்ஜி விளையாட போனுக்கு ரீசார்ஜ் செய்யாததால் 18 வயது சிறுவன் தாயின் தலையில் தாக்கிவிட்டு கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதி, கணபதிபுரத்தில் வசித்து வருகிறார் ஆண்டனி டேனியல் மற்றும் அவரது மனைவி மகன் ஆன்றோ பெர்லின் (18). கூலித்தொழிலாளியான ஆண்டனி, தன் மகன் ஆன்றோ பெர்லினை நாகர்கோவில் அருகில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்க வைத்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு நேரத்தில் கல்லூரி இல்லாததால் ஆன்றோ பெர்லின் செல்போன்னில் அடிக்ட் ஆகியுள்ளார். மேலும் இரவு பகல் பாராமல் பப்ஜி கேமில் முழ்கியுள்ளார்.
பெற்றோர்கள் பல முறை கண்டித்தும் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ள ஆன்றோ விரும்பவில்லை. இந்நிலையில் தான் கடந்த 8-ம் தேதி அவரது செல்போனின் இணைய வசதி முடிந்துள்ளது. அதனால் செல்போனுக்கு ரிச்சார்ஜ் செய்ய பணம் வேண்டும் என பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார்.
ஆனால் அவரது தாயார் பணம் கொடுக்காததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கோபமடைந்த ஆன்றோ அவரது தாயின் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் அவரது தலையில் இருந்து இரத்தம் வரவே வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் ஆன்றோவின் பெற்றோர் அவனை காணவில்லை என ராஜாக்கமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி தென்தாமரைகுளம் கடற்கரையில் ஒரு சிறுவனது உடல் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் வீட்டை விட்டு ஓடி சென்ற 18 வயது ஆன்றோ என தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
