ஒரே நாளில் 108 பேருக்கு 60-ஆம் கல்யாணம்.. 96 பட பாணியில் சந்தித்த நண்பர்கள்.. பங்கேற்று வாழ்த்திய ஆசிரியர்கள்.. சூப்பர் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்தித்த நிலையில் அவர்களுக்கு ஆசிரியர்கள் முன்னிலையில் 60 ஆம் கல்யாணம் நடைபெற்றிருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | வலியோடு 2 வருஷம் வெளிநாட்டில்.. பெற்ற மகள்களை முதல்முறை நேரில் பார்த்த தந்தை.. நெகிழ வைக்கும் வீடியோ..!
பொதுவாக, பள்ளிக்கால நண்பர்கள் ஒருவரையொருவர் மீண்டும் சந்திப்பதை வாழ்வின் மிக முக்கிய தருணமாக கருதுகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1977 - 78 ஆம் ஆண்டில் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் 45 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்தித்திருக்கிறார்கள். இது அவ்வட்டார மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
60 ஆம் கல்யாணம்
1977 - 78 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு படித்த 150 பேர் இந்த பிரம்மாண்ட விழாவில் கலந்துகொண்டனர். மேலும், தங்களது மகன், மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் கலந்துகொண்ட முன்னாள் மாணவர்களை வாழ்த்த அவர்களுக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களும் தள்ளாத வயதில் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட 150 பேரில் 108 பேருக்கு 60 வயது பூர்த்தியடைந்திருக்கிறது. இதனையடுத்து, இவர்களுக்கு 60 ஆம் கல்யாணம் நடத்தப்பட்டிருக்கிறது.
108 தம்பதிகளும் மாலைமாற்றிக்கொள்ள, யாகம் நடத்தி 60 ஆம் கல்யாணம் நடத்தப்பட்டிருக்கிறது. மேலும் 60 வயது துவங்காத, 6 தம்பதிகளுக்கும் சஷ்டியப்த பூர்த்தி யாகம் நடத்தி அனைவருக்கும் மஞ்சள் கயிறு, தாலி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், இவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் ஆசுகவி ஆராவமுதன், சீனிவாசன், அய்யாக்கண்ணு, மணவாளன் ஆகியோர் பங்கேற்று தங்களது மாணவர்களுக்கு ஆசி வழங்கினர்.
கலாம் விருது
இந்த நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 108 பேருக்கு 60 ஆம் கல்யாணம் நடத்தப்பட்டதால் உலக சாதனைக்கான கலாம் விருதும் பங்கேற்றவர்ளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இவர்களுள் அரசுப் பணியில் இருந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து அந்த பள்ளியில் தற்போது படித்துவரும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் வெங்கடாபதி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.