சென்னை ஃபாக்ஸ்கான் போராட்ட பின்னணியில் சீனா இருப்பதாகவும் தற்போது சீனாவின் குறி தமிழ்நாட்டின் மீது இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் உளவுத்துறையின் ரிப்போர்ட் ஒன்று கூறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் சமீபத்தில் மிகப்பெரிய போராட்டம் ஒன்று நடந்தது. பூந்தமல்லியில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்களுள் சிலர் விடுதி உணவை சாப்பிட்டு மயக்கம் அடைந்துள்ளனர். அவர்களின் சிலர் உயிரிழந்துவிட்டதாக போலியான செய்தி ஒன்று பரவியது.
போலியான தகவலை நம்பி ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள் சென்னை- பெங்களூரு சாலையில் போராட்டத்தில் இறங்கினர். இதனால் 10 மணி நேர போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் வந்து உண்மையை நிரூபித்த பின்னர் போராட்டத்தில் இருந்து பெண்கள் விலகினர்.
இந்த போராட்ட சம்பவத்தின் பின்னணியில் சீனா இருக்க வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறையின் ரிப்போர்ட் ஒன்று கூறுவதாக 'தி வயர்' செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா- சீனா இடையே நிலவி வரும் மோதல் போக்கு இதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் தனது உதிரி பாகங்கள் உற்பத்தியை முதலில் சீனாவில் அதிகப்படியாக நடத்தி வந்தது.
தற்போது சீனா- அமெரிக்க மோதலின் காரணமாக தற்போது இந்தியாவிடம் தனது தயாரிப்புப் பணிகளைக் கொடுத்து வருகிறது ஆப்பிள். அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படை எடுப்பதன் காரணமாக சீனா இது போன்ற பிரச்னைகளை தூண்டிவிட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்களை சீனா செயல்படுத்த வாய்ப்பு இருப்பதாக அந்த ரிப்போர்ட் எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
