ராணிப்பேட்டை: சென்னை வாசிகளை அதிர்ச்சி அடைய செய்யும் விதமான தகவலை தேசிய பசுமை தீர்ப்பாய கண்காணிப்புக்குழு தலைவர் நீதிபதி பி.ஜோதிமணி கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை நகராட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை மாநில திடக்கழிவு மேலாண்மைக்குழு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாய கண்காணிப்புக்குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி ஆய்வு செய்துள்ளார்.
திடக்கழிவு மேலாண்மை திட்டம்
அப்போது அவர் கூறுகையில், 'தமிழகத்தில் எவ்வாறு திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என முறையாக ஆய்வு செய்து வருகிறோம். ராணிப்பேட்டை மாவட்டம் புதியதாக உருவானாலும், நகராட்சி வளாகத்துக்குள்ளேயே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தியுள்ளது உண்மையில் சிறப்பான ஒன்று ஆகும்.
குப்பையை பிரித்து தரவேண்டும்:
இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் பயன் என்னவெனில் மொத்தமாக கொண்டு வரப்படும் குப்பைகளில் 60% மக்கும் குப்பைகளாகவும், 40% மக்காத குப்பைகளாக காணப்படும். பொதுவாக அந்த 60% மக்கும் குப்பைகளை வீடுகளில் குப்பையை கொட்டும்போது பொதுமக்கள் சரியாக பிரித்து தந்து விட்டார்கள் எனில், அவற்றை எங்கும் கொட்டவேண்டிய அவசியம் ஏற்படாது.
சென்னையைப் பொறுத்தமட்டில் 23%-க்கு மேல் இந்த நடைமுறை வரவில்லை. இது குறித்து கடந்த பத்து தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வரை நேரில் சந்தித்து அறிக்கையை தந்துள்ளேன். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் சென்னை மற்றும் கோயம்பத்தூர் நகரங்கள் பிரச்சனைக்குள்ளாகும் எனவும் கூறியுள்ளேன்.
சென்னை மூழ்கும்:
ராணிப்பேட்டை நகராட்சியில் 95% குப்பைகள் தரம் பிரித்து அளிக்கப்படுவது சிறப்பான ஒன்று ஆகும். அதை அப்படியே பராமரிக்க வேண்டும் என்றால் முதல் மாணவர்கள், இளைய தலைமுறையிடையே விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். உலக வெப்பமயமாதலில் உலக அளவில் திடக்கழிவுகள் 16% பங்களிப்பு உள்ளதால், 1.5% கடல் வெப்பம், 2 சதவீதமாக உயர்ந்தால் பாதி சென்னை கடலில் மூழ்கும்.
அதுமட்டுமல்லாமல் கொல்கத்தா நகரம் முழுவதும் கடலில் மூழ்க வாய்ப்புள்ளது. எனவே வீடுகளிலேயே 100% குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என சட்டம் உள்ளது. அதனை நகராட்சி, மாநகராட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.