சென்னை : கிழக்கு கடற்கரை சாலையை, 6 வழிச்சாலையாக மாற்ற, நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையின் மிக பிரபலமான சாலைகளில் ஒன்று தான் இந்த கிழக்கு கடற்கரை சாலை (ECR). சென்னைவாசிகள் அதிகம் பேர், வாகனத்தில் பயணம் செய்ய விருப்பப்படும் இந்த சாலையின் மூலம், புதுச்சேரி மற்றும் மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கும் செல்லலாம்.
அது மட்டுமில்லாமல், இந்த கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், அதிக வணிக நிறுவனங்கள், பொழுது போக்கு மையங்கள் உள்ளிட்ட பலவும் இருப்பதால், இந்த பகுதியிலுள்ள சாலையில் எப்போதும் அதிக நெரிசல் இருக்கும்.
முள் படுக்கையில் நாகராணி.. ஆக்ரோசமாக ஆடும் சாமியார்.. குவியும் பக்தர்கள்
கிடப்பில் போடப்பட்ட பணி
இதன் காரணமாக, இவ்வழியில் பயணிக்கும் மக்களுக்கு, கால தாமதமும், விபத்துக்களும் ஏற்படும் அபாயமுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, ஆறு வழி சாலையாக மாற்ற வேண்டி, கடந்த 2006 ஆம் ஆண்டு, தமிழக அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி, திருவான்மியூர் ஆர்.டி.ஓ அலுவலகம் தொடங்கி, அக்கறை வரை, சுமார் 12 கி.மீ தூரத்திற்கு ஆறு வழியாக மாற்றும் பணி, கடந்த 2012 ஆம் ஆண்டு ஆரம்பமானது.
சாதகமான தீர்ப்பு
இதற்காக, மொத்தம் 778 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியும் இருந்தது. மேலும், இப்பகுதியில் இருந்த சுமார் 40 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டு வந்தது. இதனிடையே, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வந்ததால், பாலவாக்கம் பகுதியில், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது. தொடர்ந்து, இந்த வழக்கில் நெடுஞ்சாலைத்துறைக்கு சாதகமாக தற்போது தீர்ப்பு வந்துள்ளது.
தமிழக அரசு உத்தரவு
இதனைத் தொடர்ந்து, சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு, நில எடுப்பு பணிக்கு வேண்டி, சம்மந்தபட்ட உரிமையாளர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாலவாக்கம் பகுதியில், 1.50 கி.மீ தூரத்திற்கு, நூறடி சாலையாக விரிவாக்கம் செய்ய, சுமார் 17 கோடி நிதியை ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெண்களை பகிரங்கமாக ஏலம் விட்ட புல்லிபாய் ஆப்.. ஆக்சனில் மத்திய அரசு.. பின்னணி
நெடுஞ்சாலைத் துறை அறிக்கை
இது பற்றி, நெடுஞ்சாலைத் துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருவான்மியூர் முதல் அக்கறை வரை,கடற்கரை சாலையை தரம் உயர்த்த வேண்டி, 778 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதில், எல்பி சாலை முதல் திருவான்மியூர் ஜங்சன் வரை, 219 கோடி ரூபாயில் உயர் மட்ட பாலம் அமைக்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாலவாக்கம் கிராமத்தில், கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்தும் பணிக்காக, நிலம் கையகப்படுத்த இழப்பீடு, சம்மந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு, கடந்த ஜனவரியில் வழங்கப்பட்டன.
பல்வேறு பணிகள்
இதனையடுத்து, பாலவாக்கம் கிராமத்திற்கு உட்பட்ட, 1.50 கி.மீ வரை, கிழக்கு கடற்கரை சாலை, ஆறு வழிச்சாலை விரிவாக்க பணிக்கு, சுமார் 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அறிவிப்பு பலகை, விளக்கு அமைத்தல், செடிகள் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு என இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணி, முடிவடைந்ததும், அங்கு ஆறு வழி சாலையாக மாற்றப்படுகிறது என நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.