VIDEO: ‘அடிச்சா உண்மைய வரவைக்க முடியாது’.. ‘இந்த INVESTIGATION மூலமாதான் குற்றத்தை கண்டுபிடிக்கணும்’.. ஐபிஎஸ் அதிகாரி ரவி அதிரடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காவல்துறையினர் பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என ஐபிஎஸ் அதிகாரி ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், ‘காவல்துறையினர் பொதுமக்களை அடிக்கக்கூடாது. நான் 4 மாவட்டங்களில் ஏழரை ஆண்டுகள் SP-ஆக பணியாற்றி இருக்கிறேன். அடிப்பதனால் எந்தவிதமான பயனும் இல்லை. அடிப்பதால் குற்றவாளியிடமிருந்து உண்மையை வரவழைக்க முடியாது. அடிப்பதால் நிரபராதிதான் தான் குற்றவாளி என ஒத்துக்கொள்வான். நாம் சைண்ட்டிஃபிக் இன்வெஸ்டிகேஷன் (Scientific Investigation) மூலமாகதான் குற்றங்களை கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த ஊரடங்கு சமயத்தில் பொதுமக்கள் ஊரடங்கை மீறினால், அவர்களிடம் அன்பாக பேசி திருந்தும் வகையில் சொல்ல வேண்டும். அதைவிடுத்து அவர்களிடம் ஆக்ரோஷமாக பேசுவது, தாக்குவது போன்ற நிகழ்வுகளை நடத்தக்கூடாது. ஒருசில காவல்துறையினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் ஒட்டுமொத்த காவல்துறைக்கு கெட்டபெயர் ஏற்பட்டு விடுகிறது. எனவே காவல்துறையினர் பொதுமக்களின் நண்பன் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
நமது DGP அலுவலகத்தில் மகாத்மா காந்திஜியின் போட்டோ வைத்து அதற்கு கீழே ஒரு வாசகம் எழுதப்பட்டுள்ளது. அது என்னவென்றால், “பொதுமக்கள் நம்முடைய எஜமானர்கள். நாம் அவர்களுடைய சேவகர்கள்” என இருக்கும். இந்த யூனிபார்ம் போடுவது பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கு. அதைவிடுத்து நான் ஐபிஎஸ் அதிகாரி, சப்-இன்ஸ்பெக்டர் என இருமாப்புடன், கர்வத்தோடு பலம் என சொல்வதற்காக இந்த சீருடை அல்ல. இந்த சீருடை என்பது பொதுமக்களுக்கு பணி செய்வதற்காகதான் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
பொதுமக்கள் நம்மை திட்டினால் கூட பொறுமையாக இருந்துகொள்ள வேண்டும். நாம் ஒரு பொதுமக்களை அடிக்கும் போது ஓர் ஆயிரம் பொதுமக்கள் நமக்கு எதிரியாக உருவாகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. உதாரணமாக ஒரு மாவட்டத்தில் காவலர் ஒருவரை அடித்தால் அவர் நம் உறவினராக இருக்கலாம், நண்பர்களாக இருக்கலாம். காவல்துறை பணியிலிருந்து ரிடயர்ட் ஆன பின்பு நாமும் பொதுமக்களாகதான் உருவாகிறோம். இதை இப்படியே விட்டுவிட்டால் நாமும் இதேபோல் நிகழ்ச்சிக்கு உள்ளாவோம். காவல்துறையினர் கண்டிப்பாக பொதுமக்களிடம் அன்பாகவும், மரியாதையுடனும் நடந்துக்கொள்ள வேண்டும்.
ஒரு சில காவல்துறையினர் இதுபோல் அத்துமீறி நடந்தால் உடனடியாக நீங்கள் மேலதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், 100 அல்லது 112 காவலன் செயலி மூலமாக தெரிவிக்கலாம். சாத்தன்குளம் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடைபெற்று வருவதால், அதைப்பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. நிச்சயமாக காவல்துறையினர் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
