'ஒரே அடில லைப் செட்டில்'... '97 கோடியை சுருட்ட இந்திய என்ஜினீயர் போட்ட பிளான்'... அரண்டு போன அமெரிக்க அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அமெரிக்காவை கொரோனா ஆட்டம் காண வைத்திருக்கும் நிலையில், இந்திய பொறியாளர் கொரோனவையே பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் ‘கேர்ஸ் சட்டம்’ என்ற பெயரில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. இது கொரோனா வைரசால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பெருமளவில் அவசர நிதி வழங்க, இந்த சட்டம் வழிவகை செய்தது. இந்த நிவாரண சட்டத்தின்படி, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய சிறு தொழில் நிறுவனங்களுக்கு 349 பில்லியன் டாலர் வரையில் கடன் பெற முடியும்.
இந்நிலையில் இந்த சட்டத்தையே ஆயுதமாக்கி மோசடி செய்ய முயன்ற இந்திய வம்சாவளி என்ஜினீயர் தற்போது கையும் களவுமாக சிக்கியுள்ளார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர், சஷாங் ராய். 30 வயதான இவர், கொரோனா நிவாரண சட்டத்தின் கீழ், ஒரு வங்கியில் 1 கோடி டாலர் (சுமார் ரூ.75 கோடி) கடன் வழங்குமாறு விண்ணப்பித்தார். அதில் அவர், தனது நிறுவனத்தில் 250 ஊழியர்கள் வேலை பார்ப்பதாகவும், சராசரியாக அவர்களுக்கு மாதம் 4 மில்லியன் டாலர் (சுமார் ரூ.30 கோடி) சம்பளம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோன்று மற்றொரு வங்கியில் 30 லட்சம் டாலர் (சுமார் ரூ.22 கோடியே 50 லட்சம்) கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார். அதில் தனது நிறுவனத்தில் 250 ஊழியர்கள் உள்ளதாகவும், அவர்களது மாத சராசரி சம்பளம் 1.2 மில்லியன் டாலர் (சுமார் ரூ.9 கோடி) எனவும் தெரிவித்திருந்தார். சஷாங் ராய் கொடுத்த விண்ணப்பங்களை வங்கிகள் பரிசீலனை செய்தன. அதில் 2020-ம் ஆண்டில் சஷாங்ராய் அல்லது அவரது நிறுவனம், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியதற்கான எந்த ஒரு ஆவணமும் இல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து டெக்சாஸ் தொழிலாளர் ஆணையம், சஷாங் ராய் அளித்த விண்ணப்பம் குறித்து விசாரிக்க புலனாய்வு நிறுவனத்துக்கு அனுப்பியது. இரு ஒருபுறம் இருக்க 2019-ம் ஆண்டின் நான்காம் காலாண்டு அல்லது 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டில் எந்த வருவாயையும் சஷாங்ராய் நிறுவனம் காட்டவில்லை என்று டெக்சாஸ் கணக்கு தணிக்கையர் அலுவலகம் தெரிவித்தது. இறுதியில் தொழில் நிறுவனங்கள் நடத்துவதாக கூறி மோசடி செய்து கடன் பெற சஷாங்ராய் முயற்சித்தது வெட்ட வெளிச்சமானது.
இதற்கிடையே பியூமாண்டில் உள்ள மாவட்ட கோர்ட்டில் சஷாங் ராய் மீது மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் மீது குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் நிவாரண கடனிலும் இந்தியர் மோசடி செய்ய முயற்சித்தது, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே கடும் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.