‘நாளுக்கு நாள் அதிகரிக்கும் எண்ணிக்கை’... ‘15 நாட்களில் இரு மடங்காக உயர்வு’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த 15 நாட்களில் கொரோனா வைரஸ் பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை, இந்தியாவில் இரட்டிப்படைந்து உள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கட்டுக்குள் வைக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. எனினும் பாதிப்புகள் அதிகரித்தே காணப்படுகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 100 பேர் இன்று பலியாகி உள்ளனர். இதுபற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 100 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 2,549ல் இருந்து 2,649 ஆக உயர்வடைந்துள்ளது. 27 ஆயிரத்து 920 பேர் குணமடைந்தும், 51 ஆயிரத்து 401 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 78 ஆயிரத்து 3ல் இருந்து 81 ஆயிரத்து 970 ஆக உயர்வடைந்து உள்ளது.
கடந்த 1-ந் தேதி இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,147 ஆக இருந்தது. இதேபோன்று, கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 50 ஆக இருந்தது. இந்நிலையில், கடந்த 15 நாட்களில் இந்த பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை இரட்டிப்படைந்து உள்ளது.
