நம்ம 'நாட்ல' எப்டி 'கஷ்டப்பட்டுக்கிட்டு' இருக்காங்க... இப்படி ஒரு 'திருட்டுத்தனம்' பண்ண எப்படி மனசு வந்துச்சு?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | May 15, 2020 03:40 AM

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 5 லட்சம் மாஸ்க்குகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Masks, PPE kit heading abroad illegally seized by Customs at Delhi air

உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை தடுக்க மக்கள் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் என அந்தந்த நாட்டு அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. சீனா போன்ற நாடுகளில் இருந்து மாஸ்க்குகளை இறக்குமதி செய்து வந்த நாம், தற்போது தேவை அதிகரித்து இருப்பதால் உள்நாட்டிலேயே மாஸ்க்குகளை அதிகளவில் தயாரிக்க ஆரம்பித்து இருக்கிறோம். 

இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்ல முயன்ற 5 லட்சம் மாஸ்க்குகளை டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் கைப்பற்றி இருக்கின்றனர். விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த பொருட்களை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அங்கு குழந்தைகள் ஆடை, அழகு சாதன பொருட்கள் என எழுதி வைக்கப்பட்டு இருந்த பார்சல் இருந்தது. இந்த பொருட்களை ஏற்றுமதி செய்ய தற்போது தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அதிகாரிகள் அதனை பிரித்து பார்த்தனர். அதில் 2,480 கிலோ அளவில் முக கவசம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சந்தேகத்துக்கிடமாக இருந்த பெட்டிகளை சோதனையிட்டதில், சுமார் 5 லட்சம் முகக் கவசங்கள், 57 லிட்டர் சானிடைசர், 952 பி.பி.இ. கிட் எனப்படும் பாதுகாப்பு உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தையும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனாவால் நாட்டு மக்கள் தீராத துயரத்தில் மூழ்கி இருக்கும் இந்த நேரத்திலும் இதுபோன்ற வேலைகளை செய்ய சிலர் முயற்சித்து வருகின்றனர் என்பது வருத்தப்பட வேண்டிய விஷயமாகும்.