“ஒரு நாளைக்கு 6 ஆயிரம் குழந்தைகள்.. இந்தியாவில் மட்டும் 3 லட்சம் குழந்தைகள்.. மரணத்தைத் தழுவலாம்!”.. உலகை உறையவைத்த யுனிசெஃப் ரிப்போர்ட்!
முகப்பு > செய்திகள் > உலகம்அடுத்த 6 மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாய ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கொரோனாவினாலும், அதன் விளைவாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினாலும், கர்ப்பிணிகளுக்கும் தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் வழங்குவதிலும், குழந்தைகளின் ஆரோக்கியத்துக்காக தாய்மார்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் போடப்படும் நிகழ்வுகள் குறைந்ததாலும், அடுத்த 6 மாதங்களில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வழக்கத்தை விடவும் கூடுதலாக, 5 வயதை எட்டிப் பிடிப்பதற்குள் 12 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு கணித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் மட்டும் 3 லட்சம் குழந்தைகள் உட்பட மொத்த ஆசியாவிலும் 4 லட்சம் குழந்தைகளும், அடுத்த 6 மாதங்களில் ஒருநாளைக்கு 6 ஆயிரம் குழந்தைகளும் உயிரிழப்பார்கள் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 118 நாடுகளிலும் கர்ப்பிணிகளும் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பாக பிரேசில், பாகிஸ்தான், நைஜீரியா, மாலி, சோமாலியா ஆகிய 5 நாடுகளில் உள்ள குழந்தைகள் பெருமளவில் உயிரிழப்பை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் 4 லட்சம் கர்ப்பிணிகள் உயிரிழக்க நேரிடும் என அஞ்சப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனிசெப் அமைப்பின் தலைமை சுகாதார அதிகாரி ஸ்டீபன் பீட்டர்சன் இதுபற்றி கூறுகையில், இந்த பாதிப்பு கொரோனா வந்ததுமே தொடங்கிவிட்டதாகவும், கர்ப்பிணிகளுக்கு முறையான மருத்துவ சேவை கிடைக்காததுதான் இதற்குக் காரணமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அடுத்த 6 மாதங்களுக்குள் கூடுதலாக 12 லட்சம் குழந்தைகள் மரணத்தை தழுவுவார்கள் எனும் இந்த ஆய்வுத் தகவல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.