'நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசா'... 'ராக்கெட் தயாரிக்கும் பொறுப்பில் அசத்தும் 'கோவை பெண்'... பின்னணி தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாசா விண்வெளி மையம் 2024-ம் ஆண்டுக்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் உட்படப் பலர் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் திட்டங்களில் முக்கிய பங்காற்றி உள்ளனர். கடந்த பிப்ரவரியில் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் வெற்றிகரமாகச் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கியது. இந்த திட்டத்தை கர்நாடகாவின் சுவாதி மோகன் வழிநடத்தி ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தார்.
அந்த வரிசையில் தற்போது நாசாவின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷினி என்பவர் முக்கிய பங்காற்றி வருகிறார். நாசா விண்வெளி மையம் 2024-ம் ஆண்டுக்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஒரையன் என்ற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது.
இந்த திட்டத்துக்கு ஆர்ட்டெமிஸ் என்று நாசா பெயரிட்டுள்ளது. ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் வரும் நவம்பர் மாதம் ஒரையன் விண்கலம் ஆளில்லாமல் செலுத்தப்பட்டு, பூமிக்குத் திரும்ப உள்ளது. இதன் பிறகு ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்தில் வரும் 2023 அல்லது 2024ம் ஆண்டில் ஓரையன் விண்கலம் விண்வெளி வீரர்களுடன் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் ராக்கெட்டை தயாரிக்கும் திட்டப் பணிகளில் தான் சுபாஷினி ஈடுபட்டு வருகிறார்.
இவரது சொந்த ஊர் கோவை. இவரது தந்தை பேன், பெல்ட், ரப்பர், ஆட்டோ மொபைல் தயாரிக்கும் நிறுவனம் நடத்தினார். இதுவே சுபாஷினி மெக்கானிக்கல் மீது ஆர்வம் ஏற்படக் காரணம். சகோதர, சகோதரிகள் கணினி மற்றும் மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்தபோது இவர் மட்டும் மெக்கானிக்கல் துறையைத் தேர்ந்தெடுத்தார்.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 1992-ம் ஆண்டி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பை முடித்தார். அவர் படித்த கால கட்டத்தில் மெக்கானிக்கல் பிரிவில் இவர் மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற இவர், போயிங் நிறுவன இன்ஜினீயராக அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் எஸ்எல்எஸ் ராக்கெட் தயாரிப்பு திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.