உருவான ‘புதிய’ காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னைக்கு மழை இருக்கா?.. வெளியான ‘முக்கிய’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் வரும் 23 மற்றும் 24 தேதிகளில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வரும் 22ம் தேதி ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்
நவம்பர் 23ம் தேதி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவம்பர் 24ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.