'குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு'... 'இந்த இடங்களில் எல்லாம் மழை இருக்கும்'... சென்னை வானிலை மையம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வரும் 19ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குள் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவலாவில் 4 செமீ மழை பதிவாகி உள்ளது. பந்தலூர், அவலாஞ்சியில் தலா 1 செமீ மழை பெய்துள்ளது. வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடலோர பகுதிகளில் வரும் 19ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
எனவே, இன்றும் நாளையும் வடக்கு வங்கக் கடல், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
