தமிழகத்தில் இன்று முதல் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் அரசு அறிவித்திருந்த நிலையில், சுமார் நாற்பது நாட்களுக்கு பின்னர் மதுக்கடைகளில் மது அருந்துபவர்கள் குவிந்தனர். மேலும், இன்று முதல் நாளில் மட்டும் சுமார் 150 கோடி வரை தமிழகத்தில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, இன்று முதல் நாளிலேயே மது போதையில் பல இடங்களில் விபத்துகள் மற்றும் பிரச்சனைகள் அரேங்கேறியுள்ளது. அதே போல பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது எனவும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கட்டிட தொழிலாளியான சிவகுமரன் என்பவர் மது அருந்தி விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். எதற்கு குடித்தீர்கள் என கேள்வி எழுப்பிய மனைவி பரமேஸ்வரியிடம் சிவக்குமரன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தந்தையின் செயலால் வெறுப்படைந்த கல்லூரி மாணவியான மகள் அர்ச்சனா, தனது உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டதாக தெரிகிறது.
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் பரமேஸ்வரி, மகளைக் காப்பாற்ற தீயை அணைக்க முயற்சி செய்த போது அவருக்கும் காயம் ஏற்பட்டது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
