கோமாவில் இருக்கும் தந்தை.. "நான் எப்பவும் உன்கூட இருப்பேன் மா".. எதுவும் அறியாமல் பிறந்தநாள் கொண்டாடிய மகள்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர், மலேசியாவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி, ஒரு மகளும் உள்ளார்.

இந்நிலையில்,கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி, விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார் கணேஷ். இதில் பலத்த காயமடைந்த கணேஷை, மலேசியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். அங்கு கோமாவில் இருந்த கணேஷிற்கு, கடந்த பத்தாம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. விபத்தில், கணேஷ் அதிகம் பாதிக்கப்பட்டதால், அறுவை சிகிச்சைக்கு பிறகு, அவரது தொண்டையில் குழாய் வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 நாட்களுக்கும் மேலாக கோமாவில் இருந்து வரும் கணேஷிற்கு, அறுவை சிகிச்சைக்கு பின், முன்பிருந்த உடல்நிலையை விட தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். ஆனால், முழுமையாக கணேஷ் குணமடைந்து மீண்டு வர, இன்னும் நேரம் எடுத்துக் கொள்ளும் என்றும் கணேஷின் மனைவி வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், கணேஷின் மகள், தனது பிறந்தநாளைக் கொண்டாடும் தருணம் வெளியாகி, மனதை உருக்குவதாக உள்ளது.
தனது மகள் புத்தாடை அணிந்து, பிறந்தநாளைக் கொண்டாடும் வீடியோ ஒன்றை பகிர்ந்த கணேஷின் மனைவி, 'கணேஷுடைய இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த வருஷம் அப்பா இல்லாமல் பிறந்தநாள் கொண்டாடுகிறோம். அப்பா சீக்கிரமாக திரும்பி வந்து விடுவார். அம்மா உனக்காக எப்போதும் கூட இருப்பேன். அப்பாவும் விரைவில் வந்து உன் கூடவே இருப்பார்' என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக, பிறந்தநாள் என்றாலே குழந்தைகள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்திற்கு எல்லை இருக்காது. கணேஷ் இருந்திருந்தால் கூட, மகளின் பிறந்தநாளை இப்படி கொண்டாடத் தான் எண்ணியிருப்பார். அவர் இங்கு இல்லாத போதும், மகள் தனது பிறந்தநாளைக் கொண்டாடாமல் போய் விடக் கூடாது என கணேஷின் மனைவி, மகளின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். தந்தையின் நிலை பற்றி எதுவுமே தெரியாமல், தனது பிறந்தநாளை மகள் மகிழ்ச்சியாக கொண்டாடுவது, கணேஷின் நிலை பற்றி அறிந்தவரின் மனதை கலங்க வைப்பதாக உள்ளது.
மேலும், விபத்தைச் சந்தித்து, கோமாவில் இருக்கும் கணேஷ், விரைவில் குணமடைந்து, தங்களைச் சந்திக்க வர வேண்டும் என்பது மட்டுமே குடும்பத்தினரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

மற்ற செய்திகள்
