“குறைஞ்ச வட்டியில கடன்!.. வங்கி விபரங்களை மட்டும் கொடுத்தா போதும்!”.. கால் சென்டரில் இருந்து பேசும் பட்டதாரி பெண்கள்! சென்னையை அதிரவைத்த மோசடி கும்பல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல நிதி நிறுவனங்களின் பெயர்களிலும் வங்கி நிறுவனங்களின் பெயர்களிலும் பொதுமக்களைத் தொடர்பு கொண்டு குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவர்களின் வங்கி விபரங்கள் உள்ளிட்டவற்றை வாட்ஸ்அப் மூலம் பெற்று பண மோசடி செய்த கும்பல் ஒன்று சிக்கியுள்ளது.
இது தொடர்பாக சென்னை திருமுல்லைவாயலில் போலி கால் சென்டர் ஒன்று நடத்தி வந்த கால்சென்டர் கும்பலின் தலைவன் உள்ளிட்ட 14 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இது பற்றி தொடர் புகார்கள் எழுந்ததை அடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை திருமுல்லைவாயலில் பட்டதாரி பெண்களை வைத்து நடத்தப்பட்டு வந்த போலி கால் சென்டர் ஒன்றினை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து இந்த போலி கால்சென்டர் கும்பலின் தலைவர் உள்பட 14 பேரை கைது செய்துள்ளனர்.
அத்துடன் பொதுமக்களிடம் எப்படி போனில் தொடர்பு கொண்டு, என்னவெல்லாம் பேசி மோசடி செய்கிறார்கள் என்று அங்கிருந்தவர்களை நடித்துக் காட்டச் சொல்லி போலீசார் வாக்குமூலம் எடுத்துக்கொண்டனர். பொது மக்களின் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் பணத்திருட்டு மோசடிகளில் ஈடுபட்ட இந்த கும்பல் குறைந்த வட்டியில் ஒரே நாளில் வங்கி கடன் தருவதாக பொதுமக்களிடம் கூறி முதலில் ஆசைவார்த்தை காட்டுகிறது. பின்னர் வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட அவர்களின் வங்கி விபரங்களில் இருந்து பணத்தை திருடுகிறது.
இந்த வழக்கில் இந்த கும்பலின் தலைவன் கோபி, நிர்வாகி வளர்மதி மற்றும் வளர்மதியின் கணவர் ஆண்டனி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கோபி என்பவர் கடந்த வருடம் இதே மோசடி வேலைகளை செய்து கைது செய்யப்பட்டவர். பின்னர் ஒரு வருடம் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் இருந்த கோபி மீண்டும் வெளிவந்து தன் கைவரிசையை காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போலி கால் செண்டர்களை இப்படி நடத்துவதில் மாஸ்டர் மைண்ட் என்று போலீஸாரால் புகழப்படும் கோபி கிருஷ்ணன், கொரோனா காலகட்டத்தில் பணம் தேவைப்பட்டதால், மீண்டும் போலி கால் சென்டரைத் தொடங்கியதாக கூறியிருக்கிறார்.