'ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு'... 'முக்கிய சிபிஐ விசாரணை அதிகாரி ரகோத்தமன்'... அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மரணம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் காலமானார்
கடந்த 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த மரணத்தில் பல்வேறு மர்ம முடிச்சுகள் இருந்தன. அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும் எழுந்தன.
இதையடுத்து இந்த வழக்கானது மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த நிலையில், இந்த விசாரணையில் முக்கிய விசாரணை அதிகாரியாக இருந்தவர் தான் ரகோத்தமன். இவர் சிபிஐயில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் "ராஜீவ்காந்தி கொலை வழக்கு மர்மம் விலகும் நேரம்" என்ற புத்தகத்தையும் எழுதியிருந்தார்.
மேலும் ராஜிவ் காந்தி மரணத்தில் என்ன நடந்தது என்பது குறித்தும் பொது வெளியில் அவ்வப்போது பேசியும் வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அதற்காகச் சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் இன்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கிடையே இந்த கொலை வழக்கு காரணமாகப் பேரறிவாளன், நளினி, முருகன் என ஏழு பேர் சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கின்றனர். இதில் பேரறிவாளன் குறித்த அறிக்கையில் அவர் பேட்டரி வாங்கி வந்தது ஏன் என தனக்குத் தெரியாது என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால் இதை வழக்கை விசாரித்த அப்போதைய சிபிஐ இயக்குநர் ரகோத்தமன் குறிப்பிடவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து இவர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இதை மேற்கோள் காட்டி பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.