VIDEO: ‘குழந்தைகளுக்கு 3-4 நாளா காய்ச்சல்’!.. ‘அப்பாவுக்கு ஆக்ஸிஜன் அளவு குறைஞ்சிட்டே இருந்துச்சு’.. அஸ்வின் அவசர அவசரமாக வீடு திரும்பியதற்கு பின்னால் இருக்கும் சோகக்கதை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் பாதியில் அவசர அவசரமாக வீடு திரும்பயதற்கான காரணம் குறித்து தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக சமீபத்தில் பிசிசிஐ தெரிவித்தது. இந்த தொடரில் விளையாடிய கொல்கத்தா அணியின் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், ஹைதராபாத் அணியின் சாஹா மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அமித் மிஸ்ரா ஆகியோர் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதனால் ஐபிஎல் தொடரை தேதி குறிப்பிடாமல் பிசிசிஐ ஒத்திவைத்தது.
முன்னதாக ஐபிஎல் தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜாம்பா, கைல் ஜேமின்சன் உள்ளிட வீரர்கள் கொரோனாவை காரணம் காட்டி பாதியிலேயே விலகினர். அதேபோல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடிய தமிழக வீரரான அஸ்வினும் தொடரின் பாதியில் விலகினார். இந்த நிலையில் திடீரென விலக காரணம் என்ன? என்பது குறித்து தற்போது அஸ்வின் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ள அஸ்வின், ‘நான் ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எனது குழந்தைகளுக்கு தீவிர காய்ச்சல், 3-4 நாட்களாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதை என் குடும்பத்தினர் யாருமே என்னிடம் சொல்லவில்லை. என் மனைவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மருந்துகள் கொடுத்துள்ளார், ஆனாலும் காய்ச்சல் குறையவே இல்லை.
இதன்பின்னர் என் மொத்த குடும்பத்திற்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. என் அப்பா முதல் 5 நாட்கள் நன்றாகதான் இருந்தார். ஆனால் அதன் பின் அவரின் ஆக்சிஜன் அளவு குறைந்துகொண்டே போனது. பின்னர் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட பிறகுதான் அவர் குணமடைந்தார். நான் உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன், என் அப்பாவை காப்பாற்ற முக்கிய காரணமாக இருந்தது அந்த தடுப்பூசி மட்டும்தான்.
உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களால் உங்கள் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். வைரஸ் குழந்தைகள் என்றும் பார்க்காது, உடனடியாக பாதிக்கும். இந்த கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே வழி தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டும்தான். எனவே தயவுசெய்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்’ என அஸ்வின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 18-வயக்குக்கு மேல் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.