'மும்பையில் தான் அதிகமா இருக்குன்னு சொன்னோம்'... 'ஆனா குறைந்த கொரோனா பாதிப்பு'... எப்படி சாத்தியமானது இந்த வெற்றி?
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிராவின் தலைநகர் மும்பை, தங்களின் நடவடிக்கையால் சத்தமே இல்லாமல் அங்குப் பாதிப்பை வெகுவாக குறைந்துள்ளது
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் படு தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இதில் அதிகம் பாதிக்கப்பட்டது மகாராஷ்டிரா மாநிலம் தான். அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில், ஏப்ரல் தொடக்கத்தில் தினமும் 11,000-க்கும் மேல் சென்றுகொண்டிருந்தது தினசரி பாதிப்பு. ஆனால் தற்போது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாகத் தினசரி பாதிப்பு என்பது 6,000ம் அளவுக்குக் குறைந்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை மும்பையில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 3,876 என்ற அளவிலேயே இருந்தது. டெல்லி, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் தலைநகர்களைக் கணக்கிடும்போது ஒப்பீட்டளவில் மும்பையில் பாதிப்பின் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. ஒரு கால கட்டத்தில் தினசரி பாதிப்புகள் அதிகமாகிக் கொண்டே சென்ற நகரத்தில் தற்போது பாதிப்பு கணிசமாகக் குறைந்தது எப்படி என்பது குறித்து மும்பையின் மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சாஹல் விரிவான விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதன்படி, ''இந்த மாற்றம் நிகழ முக்கிய காரணம் வலுவான அரசியல் ஆதரவு மற்றும் தைரியமான மற்றும் ஆற்றல்மிக்க தலைமைத்துவம் தான். ஆளும் கூட்டணி இதனை ஒரு போராகக் கருதி, முழுமையாக ஆதரித்தது பணிகளைச் செய்தது. அடுத்து மும்பையில் ரெம்டெசிவிர் மற்றும் பிற மருந்துகள் (குறிப்பாக மாநகராட்சி மருத்துவமனைகளில்) போதுமான அளவு இருப்பதை உறுதி செய்தோம்.
ஏப்ரல் 17, 2021 அன்று ஒரு ஆபத்தான சூழ்நிலைக்குப் பிறகு, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் தவித்துக்கொண்டிருக்க, மத்திய அரசின் உதவிய எதிர்நோக்கி இருந்த நேரத்தில் 168 நோயாளிகள் ஒரே இரவில் போதுமான ஆக்ஸிஜனைக் கொண்ட மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்தியா முழுவதும் எண்ணிக்கை சீராக அதிகரித்து வரும் நிலையில், கடந்த 20 நாட்களில் மும்பை தனது கொரோனா பாதிப்புகளைப் பாதிக்குப் பாதியாகக் குறைத்துள்ளது.
மேலும் தேவையான மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டன. மும்பையின் சிறந்த நிர்வாகத்திறன் காரணமாக கொரோனா பாதிப்புகள் குறைக்கப்பட்டதை அடுத்து, இந்திய உச்சநீதிமன்றம் மற்றும் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் ஆகியவை மாநகராட்சியை வெகுவாக பாராட்டியதோடு, உச்சநீதிமன்றத்தின் நீதிபதி டி.ஒய் சந்திரசூட், கொரோனா தொடர்பான ஒரு மனுவை விசாரித்தபோது, கொரோனா தடுப்பு பணிகள் அனுபவத்தைப் பெறவும், கையாளவும், மும்பை மாநகராட்சியை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள மத்திய சுகாதார செயலாளருக்கு அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது" எனவும் இக்பால் சிங் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் கொரோனா நெருக்கடியின் உச்சத்தில் மாநகராட்சி ஆணையராக இக்பால் சிங் சாஹல் நியமிக்கப்பட்டார். இவர் பதவியேற்றதும் மருத்துவமனைகள் மற்றும் தாராவி போன்ற ஹாட்ஸ்பாட்களைப் பார்வையிட்ட ஆணையர் சாஹல் மூன்று உத்திகளில் பணியாற்றத் தொடங்கினார். 1).நோயாளிகளிடம் ஏற்பட்டுள்ள பீதியை போக்குதல், 2).வார் ரூம்களை மேம்படுத்துதல், 3).போதுமான உள்கட்டமைப்பை உருவாக்குதல் இந்த மூன்று உத்திகள் மூலம் பணியாற்றத் தொடங்கினார்.
அதன்படி, ஒவ்வொரு கொரோனா ஆய்வகங்களுக்கும் சோதனை முடிவுகளை நோயாளிகளுடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று உத்தரவிட்டார். மேலும் சோதனை முடிவுகளை மாநகராட்சி உடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள உத்தரவிட்டார். இது தேவையில்லாத பீதியைக் குறைக்க உதவியது. மேலும் மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டுகளிலும் ஒரு வார் ரூம் என்கிற ரீதியில் அமைக்கப்பட்டன. 24 வார் ரூம்களும் தங்கள் வார்டுகளில் உள்ள நோயாளிகளின் சோதனை முடிவுகளைக் காலை 6 மணிக்குள் அனுப்பும்.
அதேபோல் ஒவ்வொரு வார் ரூம்களும் 30 தொலைப்பேசி இணைப்புகளைக் கொண்ட ஒரு கட்டுப்பாட்டு மையமாக இருந்தது. அதில் 10 தொலைப்பேசி ஆபரேட்டர்கள், 10 மருத்துவ உதவி ஊழியர்கள் மற்றும் 10 ஆம்புலன்ஸ்கள் இருந்தன. அவர்கள் மூன்று ஷிப்ட்களில் வேலை செய்தனர். இந்த மையங்கள் மூலமாக மருத்துவமனை படுக்கை வசதிகள் எங்கு காலியாக இருக்கிறது என்பது போன்ற முக்கிய தகவல்களும் வழங்கப்பட்டன.
இந்தவகையில் ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டுச் செய்ததன் விளைவாக தற்போது கொரோனா பாதிப்புகளை வெகுவாக குறைத்திருக்கிறது மும்பை மாநகராட்சி. இதற்கு மாநகராட்சி ஆணையரும், ஆளும் அரசுகளின் ஒத்துழைப்பும் கொரோனவை கட்டுப்படுத்த மிகமுக்கிய காரணிகளாகப் பார்க்கப்படுகிறது.