கணவருடன் ‘வீடியோ காலில்’ பேசும்போது வந்த பயங்கர சத்தம்.. உடனே துண்டிக்கப்பட்ட அழைப்பு.. இந்தியாவை கலங்க வைத்த ‘நர்ஸ்’-ன் அதிர்ச்சி மரணம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இதில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் விமானப்படை நடத்திய பதிலடி தாக்குதலில், ஹமாஸ் அமைப்பினர் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து காசா முனை பகுதியில் இருந்த 13 மாடி கட்டிடம் இஸ்ரேலிய படையினரால் தரைமட்டமாக்கப்பட்டது. காசா டவர் என்று அழைக்கப்படும் அந்த 13 மாடி கட்டிடம், ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைக்கான அலுவலகமாக செயல்பட்டு வந்துள்ளது. இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரத்துக்கு முன்னதாக அந்த கட்டிடத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால், பெரும் உயர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் காசா டவர் கட்டிடம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும், அடுத்த சில நிமிடங்களிலேயே ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. அதன்படி, காசாவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுகணைகளை இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஹமாஸ் அமைப்பு ஏவியது. இந்த ஏவுகணை தாக்குதலில் பேருந்து, வாகனங்கள், கட்டிடங்கள் தீக்கிரையானது. மேலும், 3 பெண்கள் உட்பட 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவை சேர்ந்த செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி அடுத்த கஞ்ச்குஷி பகுதியைச் சேர்ந்தவர் சவுமியா. இவர் கடந்த 7 ஆண்டுகளாக இஸ்ரேலில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது கணவர் மற்றும் 9 வயது மகன் கேரளாவில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பத்தன்று தனது கணவருடன் சவுமியா வீடியோ காலில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது பயங்கர சத்தம் கேட்டுள்ளது. உடனே செல்போன் அழைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன சவுமியாவின் கணவர், இஸ்ரேலில் உள்ள கேரள அமைப்பை தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போதுதான், ராக்கெட் தாக்குதலில் செவிலியர் சவுமியா உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனை வெளியுறவுத்துறை அமைச்சர் முரளிதரன் உறுதி செய்துள்ளார். ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய செவிலியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.