இன்று நாடு முழுவதும் 'சுய ஊரடங்கு'...! 'கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சோதனை முயற்சி...' வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவேண்டாம் என வலியுறுத்தல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 22, 2020 07:25 AM

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும், சோதனை முயற்சியாக, இன்று, 'மக்கள் சுய ஊரடங்கு' நடத்தப்படுகிறது. மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. பல மாநிலங்களில், பஸ் போக்குவரத்து மற்றும் பயணியர் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

Self-curfew across country today to prevent the spread of corona

சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ், இப்போது, உலக நாடுகள் அனைத்திலும், தன் கோர முகத்தை காட்டி வருகிறது. இந்தியாவில், இந்த வைரஸிற்கு, இதுவரையிலும், 270க்கும் அதிகமான மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்; ஐந்து பேர் இறந்துள்ளனர்.இதையடுத்து, மக்கள் தனிமையில் இருக்க வேண்டும், பொது இடங்களில் கூட்டம் சேரக் கூடாது, விழாக்கள் உட்பட எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 19ம் தேதி, வானொலி மற்றும் 'டிவி' வழியாக, பிரதமர், மோடி, நாட்டு மக்களிடம் பேசினார்.அப்போது, 'கொரோனா பரவலை தடுக்க, அடுத்த மூன்று வாரங்களுக்கு தனிமையில் இருக்க, மக்கள் பழக வேண்டும்; சமூக விலக்கலை கடைப்பிடிக்க வேண்டும். 'இதற்கான சோதனை முயற்சியாக, 22ம் தேதியன்று, காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணிவரை, வீட்டை விட்டு வெளியே வராமல், மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும்' என, மோடி அறிவித்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்புக்கு, மாநில அரசுகள், சமூக அமைப்புகள் உட்பட பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துஉள்ளனர். இதையடுத்து, இன்று ஊரடங்கை கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளை, மாநில அரசுகள் எடுத்துள்ளன. பல மாநிலங்களில், இன்று, பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களும், பயணியர் ரயில்களும் நிறுத்தப் பட்டுள்ளன. சென்னை, மும்பை, கோல்கட்டா, டில்லி, செகந்திராபாத் ஆகிய நகரங்களில், குறைந்த எண்ணிக்கையில், புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் முழுவதும் இன்று மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர், மோடி, 'டிவி'யில் பேசிய போது, 'கொரோனா வைரஸ் பாதிப்பை பற்றி கவலைப் படாமல், மற்றவர்களுக்காக சேவை செய்யும், டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத்தறை ஊழியர்கள், ஊடகங்களில் பணிபுரிபவர்கள், போலீசார், ஆட்டோ டிவைர்கள் உட்பட்டோருக்கு, மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். 'இதற்காக, 22ம் தேதி மாலை, 5:00 மணி முதல், 5:05 மணி வரை, வீட்டின் முற்றம், வாயில் மற்றும் மொட்டை மாடியில், அனைவரும் கூடி, கைகளை தட்டி, மணி அடித்து, கோஷம் எழுப்பி நன்றி தெரிவிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.

இதனால், இன்று மாலை, 5:00 - 5:05 மணி வரை, வீட்டில் அனைவரும் கைகளை தட்டுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #CORONAVIRUS