“யார் முதல்வர் வேட்பாளர்?”.. நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தை.. அதிமுகவின் அடுத்த கட்ட ‘பரபரப்பு’ முடிவு ‘சற்று நேரத்தில்’ அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என கட்சிக்கு இரட்டைத் தலைமை இருந்து வரும் வேளையில், ஆட்சிக்கு என்று, ஒருவர்தான் முதலமைச்சராக வர முடியும் என்பதால், வரும் தேர்தலில், யாரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பது என்பது கட்சியில் ஒரு குழப்பமாகவே இருந்து வந்தது.

கடந்த 28-ம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் பற்றிய இந்த பேச்சு எழுந்தது. இந்த நிலையில், அதிமுக முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு குறித்து இபிஎஸ், ஓபிஎஸ் இருவர் தரப்பிலும் நேற்று இரவுவரை தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி முதல்வர் வேட்பாளர் யார் என்று இபிஎஸ்,ஓபிஎஸ் இருவரும் இணைந்து இன்று காலை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சண்முகம், உதயகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ், முதல்வராக எடப்பாடி பழனிசாமி பெயரை அறிவிப்பதென்றால், வழிகாட்டுதல் குழுவை உடனே அமைப்பதுடன், அதிமுகவில் தனக்கான அதிகாரத்தை உறுதி செய்ய வேண்டும் என ஓபிஎஸ் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று காலை முதலே ஓபிஎஸ்-உடன் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்த, அதே நேரம், முதல்வருடன் உடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்ளிட்டோருடன் நேற்று மாலை முதல்வர் ஆலோசனை நடத்தினார். அத்துடன் ஓபிஎஸ் வீட்டில் இருந்து துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர் சி.வி.சண்முகம், மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் இரவு 7.40 மணிக்கு முதல்வரை சந்தித்தனர். இதில்
இரு தரப்பினரின் கருத்துகளும் இறுதிசெய்யப்பட்டதாகவும், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியா? ஓ.பன்னீர்செல்வமா? என இன்று காலை, இருவரும் சேர்ந்தே அறிவிக்கவுள்ளதாகவும் தெரிகிறது.

மற்ற செய்திகள்
