விடிய விடிய கொட்டிய மழை..20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. வெளியான ‘முக்கிய’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோர பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வானது, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகர்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் இருந்து, தெற்கு ஆந்திரா வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, 6-ம் தேதி வரை பரவலாக கன மழைக்கு வாய்ப்புள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (03.10.2021) விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், பெரம்பலூர், நாகை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருச்சி, வேலூர், திருப்பத்தூர், கரூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.