2015-க்கு பிறகு ‘சென்னையில்’ பதிவான அதிகபட்ச மழை.. இன்னும் எத்தனை நாளைக்கு ‘மழை’ நீடிக்கும்..? தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் 2015-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது அதிகபட்சமாக மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. சென்னையைப் பொறுத்தவரை தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பு இருந்தே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருவதால், நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் (Tamil Nadu Weatherman Pradeep John) தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. அந்த ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி 294 மி.மீ மழை பதிவானது. அதன்பிறகு நேற்றுதான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி 183 மி.மீ மழையும், 2020-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி 162 மி.மீ மழையும் பதிவானது.
வடக்கு மற்றும் மத்திய சென்னைப் பகுதியை நோக்கி மேகக்கூட்டங்கள் நகர்ந்து வருவதால் மழை தொடர்ந்து பெய்யும். சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திருவள்ளூர், வடசென்னை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல் கோவை, ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், கரூர், சேலம், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது’ என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.