“வாரிசு அரசியல் தப்புன்னு நா சொல்லவேமாட்டேன்… அதே நேரத்துல..!”- SA சந்திரசேகர் ‘ஓப்பன் டாக்’..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்“வாரிசு அரசியல் தப்புன்னு நா சொல்லவே மாட்டேன்” என இயக்குநரும் நடிகருமான SA சந்திரசேகர் பேட்டி அளித்துள்ளார். SA சந்திரசேகர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தற்போது வெளியாகி உள்ள படம் மாநாடு.

மாநாடு திரைப்படம் குறித்த அனுபவம் மற்றும் சில அரசியல் கருத்துகளையும் நம்மிடையே பகிர்ந்துள்ளார் SA சந்திரசேகர். அவர் கூறுகையில், “மாநாடு திரைப்படத்தில் நான் முதலமைச்சர் ஆக நடித்திருக்கிறேன். ஆனால், என்னிடம் என் கதாபாத்திரத்தைச் சொன்ன விதம் வேறு படத்தில் காட்சிகளாக எடுக்கப்பட்டு இருக்கும் விதம் வேறாக இருக்கிறது.
படத்தின் என் கதாபாத்திரத்தை இன்னும் நல்லவன் ஆகக் காட்டியிருக்கலாம் என நினைக்கிறேன். மாநாடு படத்தைப் பொறுத்தவரையில் பணப்பிரச்னை தான் காரணம் பணப்பிரச்னையால் தான் படம் வெளியீட்டில் இவ்வளவு குழப்பங்கள் ஏற்பட்டது. இந்தப் படத்தைப் பொறுத்த வரையில் உண்மையான அரசியலை அடிப்படையாக வைத்துத்தான் எடுக்கப்பட்டிருக்கிறது என நான் சொல்லுவேன்.
படத்தில் வாரிசு அரசியல் மற்றும் கட்சியில் மூத்த தலைவர்களுக்கான மரியாதைக் குறைவு ஆகியவற்றின் காட்சிகள் இருக்கும். நிஜ வாழ்க்கையிலும் நான் வாரிசு அரசியலை வேண்டாம் எனச் சொல்ல மாட்டேன். ஆனால், கட்சி சார்ந்து இருக்கும் மூத்த உறுப்பினர்கள், தலைவர்களுக்கு ஏற்ற மரியாதையை கொடுக்க வேண்டும். இளைய தலைமுறை அரசியலுக்கு வருவது தவறு இல்லை. ஆனால், சீனியாரிட்டிக்கு உண்டான அங்கீகாரத்தையும் மரியாதையையும் கொடுக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் நான் அரசியலுக்கு வர வேண்டும் என நினைத்ததே இல்லை. பதவி வேண்டும் என நினைத்ததும் இல்லை. நான் வேறு ஒருத்தரை நினைத்தேன். அது ஒரு நாள் கண்டிப்பாக நடக்கும். நான் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஒரு ஆலோசகர் ஆக வேண்டுமானால் இருக்கலாம்” எனப் பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்
