‘எனக்கு விஜய்தான் பிடிக்கும்’!.. ‘பிகில்’ படத்தைக் காட்டி சிறுவனுக்கு சிகிச்சை.. சென்னையில் நடந்த ருசிகரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் 10 வயது சிறுவனுக்கு பிகில் படத்தை காண்பித்து சிகிச்சை மேற்கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சசிவர்ஷன் என்ற 10 வயது சிறுவன், தனது மாமா அரவிந்த் என்பவருடன் பைக்கில் சென்றுகொண்டு இருந்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் காயத்திற்கு தையல் போட்டு சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர். அதனால் முதலில் வலி தெரியாமல் இருக்க ஊசி செலுத்த முடிவு செய்துள்ளனர். ஆனால் பயத்தில் சிறுவன் ‘ஊசி வேண்டாம்’ என அடம்பிடித்து அழுதுள்ளான். எவ்வளவோ முயன்றும் சிறுவன் ஒத்துழைக்காததால், மருத்துவர்கள் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்துள்ளனர்.
அப்போது இரவு பணியில் இருந்த ஜின்னா என்பவர் சிறுவன் சசிவர்ஷனிடம் மெதுவாக பேச்சு கொடுத்துள்ளார். அப்படியே நைசாக ‘உனக்கு என்ன பிடிக்கும்?’ எனக் கேட்டுள்ளார். அதற்கு சிறுவன், நடிகர் விஜய் மிகவும் பிடிக்கும் என வலியால் அழுதுகொண்டே கூறியுள்ளான். மேலும் விஜய் நடித்த படங்களின் பாடல், வசனம் எல்லாம் தனக்கு மனப்பாடமாக தெரியும் என சிறுவன் கூறியுள்ளான்.
இதனை அடுத்து ஜின்னா தனது செல்போனில் வைத்திருந்த விஜய்யின் ‘பிகில்’ படத்தை போட்டு சிறுவனிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கிய சிறுவன், ஆர்வமாக படத்தைப் பார்க்க ஆரம்பித்துள்ளான். இந்த சமயத்தில் சிறுவனுக்கு வலி தெரியாமல் இருக்க ஊசி செலுத்திய மருத்துவர்கள், காயத்துக்கு தையல் போட்டுள்ளனர். விபத்தில் காயம் அடைந்த சிறுவனுக்கு பிகில் படத்தைக் காண்பித்து சிகிச்சை அளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
